சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சேலம் சரக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் இன்றைய தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இது மட்டுமில்லாமல் 4 மாவட்ட துணை ஆணையாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து காவல் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதற்கு முன்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஏடிஜிபி காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து கோவையில் உயிரிழந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு மலர் தொகை மரியாதை செலுத்தினர்.



பின்னர், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சேலம் சரகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மன அழுத்தத்தை குறைப்பது குறித்து அதிகாரிகளிடம் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் ஆலோசனை வழங்கினார். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏதாவது தேவைகள், குறைகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முறையாக தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வு காணப்படும் என்பது குறித்தும் அதிகாரிகளும் எடுத்துரைத்தார். மேலும் காவல்துறையில் பணியாற்றி வரும் அனைத்து காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பது பற்றி உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளார். மேலும் சேலம் சரகத்தில் சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? விற்பனை செய்தவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் மற்றும் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்து வருகிறார். மேலும் கஞ்சா விற்பனை எந்த அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.