விஜயின் படத்தில் வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அவர் பேசியிருக்கிறார். 


பிரபல நடிகரான அர்ஜூனிடம் உதவியாளராக பணியாற்றிய விஷால், காந்தி கிருஷ்ணா இயக்கிய  ‘செல்லமே’ படத்தில் நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். பாலா இயக்கத்தில் உருவான அவன் -இவன் படத்தில் விஷால் மாற்றுத்திறனாளியாக நடித்தார். அந்தப்படத்தில் இவரது நடிப்பு பெருமளவு பாராட்டை பெற்றது. 




இதனைத்தொடர்ந்து பூஜை, ஆம்பள, கத்தி சண்டை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்த விஷாலுக்கு இறுதியாக ஆக்‌ஷன் படம் வந்தது. அடுத்ததாக இவரது நடிப்பில் லத்தி படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே விஷால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜயின் 67 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. முன்னதாக லத்தி படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்தப்படத்தை பிரோமோட் செய்யும் விதமாக விஷால் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அது சம்பந்தமான நேர்காணலில் விஜய் படத்தில் அவர் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. 




விஷால் இது குறித்து பேசும் போது, “ ஆமாம், லோகேஷ் என்னிடம் வந்து விஜயின் 67  ஆவது படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை. காரணம் எனக்கு அடுத்தடுத்து வேலைகளை கமிட் செய்து விட்டேன். நான் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதை முடித்து விட்டு துப்பறிவாளன் 2 இருக்கிறது. அதற்கடுத்தபடியாக, கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ஒரு படம் கமிட் ஆகிருக்கிறேன். அதனால்தான் என்னால் விஜயின் 67 ஆவது படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையும் மீறி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான முழு அர்ப்பணிப்பை கொடுத்திருக்க முடியாது. நான் அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன். அடுத்ததாக, அவரிடம் அனுமதி வாங்கி கதை சொல்ல இருக்கிறேன்” என்று பேசினார்.