நான் மீம்ஸ் க்ரியேட் பண்ணுபவர்களைப் பார்க்க விரும்புகிறேன். எனக்கு சினிமாவில் கேப் விழுந்தப்ப அந்த மீம்ஸ் மூலம் அவர்கள் தான் உலகம் பூராவும் கொண்டு சேர்த்துட்டாங்க. அதனாலத் தான் இவனுக்கு படமே கொடுக்காதீங்க சொன்ன திரையுலகினர் எல்லோரும் கலக்கத்தில் இருக்காங்க என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.


எனது வசனங்கள், நான் நடித்த காட்சிகளை வைத்து நிறைய மீம்ஸ் உருவாக்குகிறார்கள் என்பதை எனது மகன், மகள்கள், மருமகள்கள் மூலம் தான் தெரிந்தது. அதைப் பார்க்கும்போது சிலர் அதை நான் தான் உருவாக்குகிறேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த மீம்ஸ்களை உருவாக்குபவர்களை நான் கண்ணால் கூட பார்த்தது இல்லை. அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உண்மையைச் சொல்லணும்னா நான் பேசிய வசனங்களை வைத்து ஏதோ ஒரு வகையில் அந்த மீம்ஸ் கிரியேட் செய்பவர்கள் சமூக கருத்துகளைச் சொல்கிறார்கள். அதனால் சில நேரம் அதைப் பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் அதைப் பார்க்கும்போது ரொம்பவே பயமா இருக்கும்.


சண்டையில் கிழியாத சட்டை:


கடந்த தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிருபிக்க நடக்கவிருந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததையடுத்து ஏற்பட்ட அமளியில் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டவாறு அவர் வெளியில் வந்தார். இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டிப் பேசிய வடிவேலு, சட்டப்பேரவையில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு விஷயத்துக்காக ஸ்டாலின் போராடுகிறார். அதில் அவர் சட்டை கிழிந்துவிடுகிறது. அவர் சட்டசபையில் இருந்து கிழிந்த சட்டையோடு வருகிறார். அதை வைத்து இந்த மீம்ஸ் க்ரியேட்டர்கள் என்ன பண்றாய்ங்க, சண்டைல கிழியாத சட்ட எதுன்னு நான் நடித்த வின்னர் படத்தின் காட்சியை எடுத்துப் போட்டு மீம்ஸ் உருவாக்குறாய்ங்க. எனக்கு அதைப் பார்க்கும் போது பகீர்னு இருக்குமா இல்லையா?




ஆனாலும் நான் மீம்ஸ் க்ரியேட் பண்ணுபவர்களைப் பார்க்க விரும்புகிறேன். எனக்கு சினிமாவில் கேப் விழுந்தப்ப அந்த மீம்ஸ் மூலம் அவர்கள் தான் உலகம் பூராவும் கொண்டு சேர்த்துட்டாங்க. அதனாலத் தான் இவனுக்கு படமே கொடுக்காதீங்க சொன்ன திரையுலகினர் எல்லோரும் கலக்கத்தில் இருக்காங்க.


கவுண்டமணி ஐயா-வ அடிச்சுக்க ஆளே கிடையாது..


என்னிடமிருந்து நிறைய ஹீரோக்களை பிரித்திருக்கின்றனர். இப்போ ஃப்ரெண்ட்ஸ் படம் பார்த்தீங்கனா இரண்டு பெரிய ஹீரோக்களும் எனக்குக் கட்டுப்பட்டவர்களாகத் தான் இருப்பார்கள். அப்படி நடிச்ச என்னை, சிலர் என்ன இவரு எல்லாத்தையும் போடா வாடான்னு சொல்றார்னு பிரிச்சுவிட்டாய்ங்க. ஆனால் இந்த வேலை எல்லாம் கேரள சினிமாவில் இல்லை. மற்றவர்களைக் கலாய்ப்பதில் கவுண்டமணி அண்ணனை அடிச்சுக்க ஆளே கிடையாது.


சிரிப்பு வராதவர்களுடன் சேர்வது உயிருக்கு ஆபத்து. என்னோட படத்தில் ஒரு காமெடி வரும். ஒரு சொம்புல தண்ணி கேட்டிருப்பேன். அதை வெள்ளிச் சொம்பு கேட்டதா சொல்லி கல்யாணத்தையே நிறுத்திடுவாய்ங்க. அப்படித்தான் சினிமாவில் நான் சொல்லாததை எல்லாம் சொல்லி என்னை ஒதுக்கப் பார்க்குறாய்ங்க. இது ஒருசிலரோட வேலை. ஆனால் நான் வேற ரூட்ல போகப்போறேன். விரைவில் நான் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளத்தில் வருவேன். என்னை ஹாலிவுட்டில் எல்லாம் கூப்புடுறாங்க. என்னோட லெவல் மாறப்போகுது அப்போ இவுங்க எல்லாம் வயிறு எறியப் போறாய்ங்க.