ஆண்டுதோறும் அக்டோபர்  10 ஆம் தேதி உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று இந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பதிவிட்டு வந்தனர். குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் நோயின் தாக்கம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு போன்ற காரணங்களாலும், ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாமல் அடைந்திருந்தாலும் பலர் மன நலம் பாதிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன.


அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து தனது தனிப்பட்ட வாழ்வில் நடத்த முக்கிய சம்பங்களுடன் விளக்கி இருக்கிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “எனக்கும் ஒரு காலக் கட்டத்தில் மன நலம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்பட்டது. இதுபோன்ற விழிப்புணர்வுகளால் இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வந்தேன். இப்போது மன அரோக்கியம் பற்றி மக்கள் அதிகம் பேசுகிறார்கள். அதற்கான உரையாடலுக்கான கதவுகள் திறந்துவிடப்பட்டு இருக்கின்றன. மக்களும் இது தொடர்பான உதவியை கேட்டுப்பெற தயங்குவது இல்லை.” என கூறி இருக்கிறார்.


தொடர்ந்து பேசிய ஸ்ருதி ஹாசன், “நமக்கு காய்ச்சலோ, ஒற்றை தலைவலியோ, வயிற்று வலியோ இருந்தால் முதல் நாள் ஆஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம். 2 வது நாளும் அது தொடர்ந்தால், தாயிடம் அதுகுறித்து தெரிவிப்போம். 3 வது நாள் மருத்துவரிடம் செல்வோம். ஆனால், மூளை தொடர்பான பிரச்சனைகள் வித்தியாசமானவை. மனம் என்பது அது நினைத்தபடி இயங்கும். அது ஒரு ரசாயண மாற்றம் போன்றது. உண்மையை சொல்லப் போனால் நமது உடலை இயக்க பல விசயங்கள் தேவைப்படுகின்றன.” என்றார்.



தாமும் மன நல சிகிச்சையின் மூலம் பயனடைந்ததாக ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். “ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை அதிகம் இருந்தால் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். உதாரணத்துக்கு சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிக்கு இன்சுலின் மருந்து தேவைப்படுவதை போல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய சிகிச்சைகள் அவசியம்.” எனக் கூறிய அவர், நாம் இப்போது தைரியமாக மன ஆரோக்கியம் குறித்து பேசும் இடத்துக்கு நகர்ந்துவிட்டோம் என்கிறார் நம்பிக்கையுடன்.


“இந்தியாவில் உள்ள ஒரு அழகான விசயம் என்னவென்றால் குடும்ப முறை. உங்களுக்கு நண்பர் இருப்பார். உங்களுக்கு கணவர் இருப்பார். உங்களுக்கு மனைவி இருப்பார். நீங்கள் பேச விரும்பியதை தாராளமாக பேசலாம். இது மிகவும் அழகான விசயம். ஒவ்வொருவருக்கும் குடும்பத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. நமது குடும்பத்தினர் மனநலம் குறித்து கற்று அறிந்தவர்கள் இல்லை. ஆனால், இந்தியாவில் உள்ள அழகிய குடும்ப அமைப்பு முறை என்பது உதவி தேவைப்படுபவருக்கு உறுதுணையாக இருக்கிறது.” என வியந்து பேசியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.