ஆஸ்கர் விருது விழாவில் ஏற்பட்ட சலனத்திற்கு பிறகு ப்ரபாலாமாகி வரும் அலோபேசியா எனும் நோயால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை சமீரா ரெட்டி குபைப்பிட்டுள்ளார். `மென் இன் ப்ளாக்' திரைப்படம் மூலம் நமக்குப் பரிச்சயமான ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பல திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகராகத் திகழும் இவர், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் `கிங் ரிச்சர்டு' திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கட் ஸ்மித்தின் முடி உதிர்ந்த தலை குறித்து கேலி செய்யும் விதத்தில் பேசியிருக்கிறார். இதையடுத்து அவ்விழா மேடையிலேயே கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்த காட்சி உலக அளவில் வைரலாகி வருகிறது.


Alopecia Areata என்கிற முடி உதிர்வு பிரச்னைக்கு ஜடா பிங்கட் ஸ்மித் ஆளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் பிரபல நடிகை சமீரா ரெட்டி, தமிழில் ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி தொடர்ந்து சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி, யோகா குறித்த வீடியோக்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரை பலரும் இவரது வயதான தோற்றத்தை கண்டு சமூக வலைதளங்களில் நகைப்பதுண்டு. ஆனால் இத்தனை நாள் வெளிப்படுத்தாத ஒரு சீக்ரெட்டை நேற்று இந்த விஷயம் நடந்த பிறகு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.



அந்த பதிவில், "நேற்று ஆஸ்கார் விழாவில் நிகழ்ந்த விஷயம் என்னை இதனை இங்கு கூறவைத்துள்ளது. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் ஒவ்வொரு கஷ்டங்களை, தடைகளை எதிர்த்து போராடி வருகிறோம். அதனால் நாமே நம்முடன் இருப்பவர்களுக்கு பாதுகாப்பான, வளமான இடத்தை உருவாக்குவதற்காக கடமைப் பட்டுள்ளோம். அலோபேசியா என்பது முடி உதிர்வு பிரச்னைக்கான பொதுவான பெயர். இதில் பல வகைகள் இருக்கின்றன. அலோபேசியாவும் ஒரு வகையான autoimmune disease தான். நம் உடலின் செல்களை வெளியில் இருந்து வந்த கிருமி என நினைத்து, நமது நோய் எதிர்ப்பு சக்தியே அழித்துவிடுவதுதான் autoimmune disease.


முடி வளரும் பகுதிகளில் உள்ள செல்கள் இக்காரணத்தால் அழிக்கப்படும் நிலையில் அங்கு முடி உதிர்ந்து போகிறது. 2016 ஆம் ஆண்டு அக்ஷய் என் தலையின் பின்பகுதியில் 2 அங்குல அளவிற்கு வட்டமாக வழுக்கை இருப்பதைப் பார்த்து சொன்னார். அப்போதுதான் அது எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு மாதத்தில் மேலும் இரண்டு இடங்களில் ஏற்பட்டதை கண்டுபிடித்தேன். இதனை சமாளிக்க மிகவும் கடினமாக இருந்தது. அலோபீசியா ஏரியாட்டா யாரையும் நோய்வாய்ப்பட செய்யாது, தொற்றுநோயும் இல்லை. இருப்பினும், இதனை உணர்வுப்பூர்வமாக கையாள்வது கடினமாக உள்ளது. பலருக்கு, அலோபீசியா ஏரியாட்டா என்பது அதிர்ச்சியளிக்கும் நோயாகும், முடி உதிர்தல் மட்டுமின்றி அதனால் ஏற்படும் மனக்கவலையை எதிர்கொள்வதற்கு மிகவும் சவாலாக இருந்தது.



பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முடி மீண்டும் வளரக்கூடும் என்றும், உச்சந்தலையில் 'கார்டிகோஸ்டீராய்டு' ஊசி செழித்தியதன்மூலம் எனது மூன்று திட்டுகளிளும் மெதுவாக முடி வளர்ந்தன என்றும் மருத்துவர் என்னிடம் கூறினார். ஆனால் இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஒரு நபருக்கு அலோபீசியா ஏரியாட்டா வருவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உடலின் அனைத்துப் பாகங்களிலும் வளர்ந்துள்ள முடிகள் உதிர்ந்துவிடுவதற்கு Alopecia totalis/ universalis என்று பெயர். உடலின் சில இடங்களில் மட்டும் நாணயத்தின் அளவில் உண்டாகும் முடி உதிர்வுக்கு Alopecia areata என்று பெயர். இது தலையின் ஒரு சில இடங்களில் வரலாம், புருவங்களில், தாடியில் என எங்கு வேண்டுமானால் வரலாம். இப்போது என் தலைமுடி சீராக இருப்பதற்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.


எனக்கு எப்போது வேண்டுமானாலும் இது மீண்டும் வரலாம் என்று கூறியிருக்கிறார் மருத்துவர். ஆனால் இந்த வேகமான உலகம் இந்த பிரச்சனையை கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக கையாள வேண்டும். இதனால் பாதிக்கப்படுவபவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார். இப்பிரச்னையை நம் மக்கள் புழு வெட்டு என்று குறிப்பிடுவார்கள். உலக மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் இப்பிரச்னைக்கு ஆளாகு கின்றனர். Alopecia areata பிரச்னையைப் பொறுத்தவரை முடி உதிர்ந்த பகுதிகளில் மீண்டும் முடி வளர்வதற்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருக்கின்றன. உடல் முழுவதும் உள்ள முடிகள் உதிரும் Alopecia totalis/ universalis பிரச்னைக்கு உலக மக்கள் தொகையில் 0.8 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு ஆளானவர்களுக்கு மீண்டும் முடி முளைப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.