லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.


தனது படங்களில் காட்டு விலங்குகளின் ரெஃபரன்ஸை பயன்படுத்தும் லோகேஷ் கனகராஜ், இம்முறை கழுதைப்புலி எனப்படும் ஹைனாவை தேர்வு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஆக்ரோஷமான விஜய், ஹைனாவின் பற்களை உடைப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டது. அக்டோபர் 5 ஆம் தேதியன்று வெளியான ட்ரெய்லரிலும் வி.எஃப்.எக்ஸ் செய்யப்பட்ட ஹைனாவின் காட்சி இடம்பெற்று இருந்தது. இயக்குநர் லோகேஷ் படத்தில் 10 நிமிடங்களுக்கு ஹைனா சண்டை காட்சி இருக்கும் என தான் பங்குபெற்ற பல நேர்காணல்களில் கூறியுள்ளார். அந்நாளில் இருந்தே ஹைனா மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்தது.


தி லயன் கிங்


புகழ்பெற்ற “தி லயன் கிங்” படத்திலும், ஹைனாக்கள் முக்கிய பங்கு வகித்து இருக்கும். முஃபாசாவின் இடத்தை பிடிக்க ஆசைப்படும் ஸ்கார், நம்பகத்தன்மையான ஹைனாவின் நட்பை பெறும். அதன் பின்னர், ஹைனா கூட்டம் ஸ்காருக்கு உதவும்.


இமைக்கா நொடிகள் 




இமைக்கா நொடிகள் படத்திலும் அனுராக் காஷ்யப் , ஹைனாவை ரெஃபரன்ஸாக பயன்படுத்தி இருப்பார்.
“சிங்கம் பதுங்கி வேவு பார்த்து குறி வைத்த இறையை அடித்த பிறகு, அதன் உழைப்பை வீண் அடிக்கும் வகையில் ஹைனா ஏதோ ஒரு சூழ்ச்சி செய்து அந்த இறையை தட்டி பறித்துவிடும். இதை திரும்ப திரும்ப ஹைனா செய்துக்கொண்டு இருக்கும். சிங்கத்தின் மேல் இருக்கும் பயம் காட்டில் குறைந்து கொண்டே இருந்தது. அதில், அந்த ஹைனாவிற்கு அப்படி ஒரு சந்தோஷமாம். என்றாவது இந்த ஹைனா சிக்கி சாகாதா என்று நாட்களை எண்ணிக்கொண்டே இருந்ததாம் சிங்கம். அந்த நாள் நெருங்கியது, மொத்த காடும் அறண்டு போனது. ஒரு பக்கம் சிங்கம், மறு பக்கம் ஏதோ ஒரு திட்டத்துடன் சிரித்து கொண்டே வரும் ஹைனா.” என ஹைனாக்களின் குணாதிசயங்களை விவரிக்கும் வகையில் படத்திற்கேற்ற வசனத்தை பேசியிருப்பார் அனுராக்.


இந்த வரிசையில், லியோ படத்தில் ஏன் ஹைனா பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வியும் ஆர்வமும் மக்களிடையே காணப்படுகிறது. அதற்கு முதலில், ஹைனாவின் குணாதிசயங்களை பற்றி பார்க்கலாம்.


ஹைனா வகைகள்


ஹைனாக்களில் மொத்தம் 4 வகைகள் உள்ளன. உடம்பு முழுவதும் புள்ளிகளை கொண்டிருப்பது ஸ்பாட்டட் ஹைனா. கோடுகளை கொண்டது ஸ்ட்ரைப்ட் ஹைனா. சாம்பல் நிறத்தில் இருப்பது க்ரே ஹைனா, ஓநாய் போன்று இருப்பது ஹார்ட் வுல்ஃப். இவை ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு, ஆசிய கண்டங்களில் காணப்படும். இந்தியாவிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் அதிகமாக உள்ளது. 


ஹைனாவின் குணாதிசயங்கள்



  • ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பை கொண்ட இந்த விலங்கு இனத்தில் பெண்கள்தான் எல்லாம்.

  • குறிப்பாக ஸ்பாட்டட் ஹைனா வகைகளில் “ஆல்ஃபா ஃபீமேல்” குணம் கொண்ட பெண்கள்தான் இருக்கும்.

  • அந்த கூட்டத்திற்கு தலைவனோ, ராஜவோ இருக்காது. மாறாக தலைவிகளும், ராணிகளுமே இருக்கும்.

  • இவை எப்போதும் கூட்டம் கூட்டமாக வாழும். ஒற்றுமைதான் இதன் பலம்.

  • வேட்டையாட தெரிந்தாலும், மற்றவை வேட்டையாடும் எச்சங்களை உண்டு வாழும்.

  • ஒரு சிங்கம் தான் வேட்டையாடிதை தனியாக சாப்பிடும் போது கூட்டமாக செல்லும் ஹைனா கேங், சிங்கத்தை விரட்டி அடித்து அந்த உணவை உண்ணும். 

  • ஹைனாக்கள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு.





  • ஹைனாக்கள் நட்பிற்கு இலக்கணமாக திகழும் தன்மை கொண்டது.

  • தன்னை சீண்டினால் பழி வாங்காமல் விடாது.

  • இதன் தாடைகள் மிகவும் வலியதாக இருக்கும். அதனால், இவை எலும்புகளை உண்டுவிடும்.

  • இவை பிரச்சினையில் இருக்கும் போது ஒருவிதமான சத்தத்தை எழுப்பும். இது கேட்பதற்கு சிரிப்பு சத்தம் போல் இருக்கும்.


முன்பு கூறிய தி லயன் கிங் மற்றும் இமைக்கா நொடிகள் படத்தில், சிங்கங்களும் ஹைனாக்களும் பரம எதிரிகளாக இருப்பது போல, லியோ படத்திலும் இதே கதைதான் தொடரும். இவை இரண்டும் ஒரே இடத்தில் வாழ்வதால், உணவுக்காக சண்டை போடுகிறது. அத்துடன் இந்த கொடூர காட்டு விலங்குகள், எதிராலியின் குட்டிகளையும் கொன்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.


லியோ படத்தில் ஹைனாவிற்கு என்ன வேலை?


இப்போது லியோ படக்கதைக்கு வருவோம். லியோ என்பது சிங்கத்தை குறிக்கும் ஒரு வார்த்தையாக இருக்கிறது. லியோவாக இருக்கும் விஜய்யின் குடும்பத்தை பதம் பார்க்க ஆசைப்படும் வில்லன்களே ஹைனாக்களாக காண்பிக்கப்பட்டு இருக்கலாம். லியோவின் உழைப்பை சுறண்டி உண்பவர்களாகவும் இவர்கள் இருக்கலாம். ஹரோல்ட் தாஸ், ஆண்டனி தாஸ் ஆகிய இருவரும் ஹைனாக்கள் போல் எப்போதும் பெரும் கூட்டத்துடனே இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், நட்பிற்கு உண்மையாக இருக்கும் இந்த வில்லன்கள், பழி வாங்குவதிலும் முந்திக்கொள்பவர்களாக இருப்பவர்களாக தெரிகிறது. இந்த 10 நிமிட ஹைனா காட்சி, படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 




லியோ என்பது பார்த்தியின் அல்டர் ஈகோவா? லியோவும் பார்த்தியும் வெவ்வேறு நபர்களா? லியோவிற்கு விபத்து ஏற்பட்டு நினைவுகளை இழந்து பார்த்தியாக புது வாழ்க்கையை வாழ்கிறாரா? என்பது படத்தை பார்த்தால்தான் புரியும்.