இந்தியாவின் பிரபலமான யூ டியூபர்களில் ஒருவர் ஹர்ஷா சாய். அடுத்தவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுத்து அதை வீடியோவாக எடுத்து யூ டியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர். இவர் செய்யும் உதவிகளும், மிகவும் பின்தங்கிய குடும்ப சூழலில் இருப்பவர்களுக்கு இவர் செய்யும் உதவிகள் காரணமாக இவரது யூ டியூப் சேனலுக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார்:
யூ டியூபரான இவர் திரைப்படமும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள நரசிங்கி காவல் நிலையத்தில் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
25 வயதான நடிகை ஒருவர் இந்த புகாரை அளித்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஹர்ஷா சாய் நடித்த படத்தில் அவருடன் இணைந்தும் அந்த நடிகை நடித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஹர்ஷா சாயை முதன்முதலில் சந்தித்தாக குறிப்பிட்டுள்ள அந்த நடிகை பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் அதிர்ச்சி:
ஹர்ஷா சாய் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை தனது செல்போனில் எடுத்து வைத்துக் கொண்டு அந்த பெண்ணை மிரட்டுவதாகவும் அந்த நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷா சாய் மீதான இந்த குற்றச்சாட்டு அவரது யூ டியூப் சப்ஸ்கிரைபர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷா சாய் செய்யும் நலத்திட்டங்கள் காரணமாக அவரை மிஸ்டர் பீஸ்ட் ஆஃப் இந்தியா என்று அன்புடன் ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஹர்ஷா சாய் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், இந்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஹர்ஷா சாய் விரைவில் கைது செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.