பிரபல ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மேன் டெட்பூல் 3 திரைப்படத்தில் வால்வரினாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு தெரிவித்துள்ளார். டெட்பூல் 3 திரைப்படம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது என முன்னதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.






இது தொடர்பாக நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் பதிவிட்ட வீடியோவில், டிஸ்னி 23 எக்ஸ்போவை நாங்கள் தவறவிட்டது மன வருத்தம் அளிக்கிறது. ஆனால் வெகு நாட்களாக டெட்பூல் திரைப்படத்திற்காக மிகக் கடினமாக நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.


மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒவ்வொரு அறிமுகமும் ஸ்பெஷலாக இருக்க வேண்டும். கதாபாத்திரத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்.  புதிய ஆழம்,உந்துதல், பொருள் ஆகியவற்றை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு டெட்பூலும் தனித்து நிற்க வேண்டும். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. ஆனால் எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை‌. ஆனால் எங்களிடம் ஒரே ஒரு ஐடியா உள்ளது என்று கூறி… பேக்ரவுண்டில் நடந்து சென்ற நடிகர் ஹக் ஜேக்மேனிடம் மீண்டும் ஒருமுறை வால்வரினாக நீ நடிக்கத் தயாரா? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த ஜேக்மன், ''நிச்சயமாக'' என்று பதில் அளித்துள்ளார். 






அந்த வீடியோவின் இறுதியில் கம்மிங் ஹக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் டெட் பூல் லோகோ தோன்றி, அதில் வால்வரின் நகங்கள் கீறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 


2017 ஆம் ஆண்டு வெளிவந்த லோகன் திரைப்படத்தில் நடிகர் ஹக் ஜேக்மேன் வால்வரினாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எக்ஸ்-மென் யுனிவர்சில் பல வருடங்களுக்கு முன்பு இருந்த வால்வரின் கேரக்டர் மீண்டும்  மார்வெல் யுனிவர்சுக்குள் வருவது படம் குறித்த எதிர்பார்ப்பைக் கூட்டி உள்ளது.


மார்வெல் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்காக மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.