பாலிவுட் சினிமாவின் கிரேக்கக் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தன் தோற்றம் மற்றும் நடன அசைவுகளால் இளம்பெண்கள் தொடங்கி அனைவரையும் கவர்ந்து கொண்டாடித் தீர்க்கப்படுபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.  


ஹ்ரித்திக் ரோஷன்:


பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்த ஹ்ரித்திக், தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷனின் மகனாவார். 2000ஆம் ஆண்டு கஹோனா பியார் ஹே படத்தில் அறிமுகமானது தொடங்கி, தொடர்ந்து தன் திரைப்பயணத்தில் ஏறுமுகத்திலேயே பயணித்த ஹ்ரித்திக், தன் கல்லூரி காலத்தில் காதலில் விழுந்த சுஸான் என்பவரைக் கரம் பிடித்தார்.


இந்த ஜோடி பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் 2014ஆம் ஆண்டு பிரிவை அறிவித்தனர். சுமார் 14 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இவர்கள் விவாகரத்து பெற்ற நிலையில்,  இதனிடையே மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக ஹ்ரித்திக் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார்.


சபா ஆதாத்:


‘பேங் பேங்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது ஹ்ரித்திக்குக்கு ஏற்பட்ட விபத்தால் மூளையில்  ரத்தம் தேங்கிய நிலையில், சிகிச்சை மேற்கொண்டு அதனால் பெரும் சிரமங்களை ஹ்ரித்திக் எதிர்கொண்டு வந்தார். மேலும் இந்தச் சம்பவங்களை அடுத்து தேர்ந்தெடுத்த படங்களில் ஹ்ரித்திக் நடிக்கத் தொடங்கினார். மேலும் திருமண முறிவுக்குப் பிறகும் தன் முன்னாள் மனைவியுடன் ஹ்ரித்திக் நட்புறவுடனேயே வலம் வருகிறார்.


இச்சூழலில், தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சபா ஆசாத் என்பவரை ஹ்ரித்திக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். பொது நிகழ்வுகள் உள்பட பல நிகழ்ச்சிகளுக்கும் இந்த ஜோடி ஒன்றாகவே சென்று வரும் நிலையில், இவர்களது புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.


முன்னதாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி மும்பையில் பிரம்மாண்ட கலாச்சார மையத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்த விழாவுக்கு ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் வரை பலரும் கலந்துகொண்டனர்.


காதலியின் காலணிகள்:


இந்நிலையில் இந்த விழாவில் முன்னதாக ஹ்ரித்திக் தன் காதலி சபா ஆசாத் உடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.


 






மேலும் தன் காதலியின் ஹை ஹீல்ஸ்  செருப்பை அவருக்கு உதவும் வகையில் ஹ்ரித்திக் கைகளில் தூக்கிக் கொண்டு இந்த விழாவில் கேஷூவலாக வலம் வந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் ஹ்ரித்திக்கின் இந்த செயலை அவரது ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.