புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதியின் கலக்கல் காம்போவில் வெளியான படம் “விக்ரம் வேதா “. இந்த படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. இதில் வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்,  கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு  சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் பிரபலம். விக்ரம் வேதா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ரீமேக் உரிமை தயாரிப்பாளரான சஷி காந்திடம் இருந்தது.  இதனிடையே ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை  பிரபல ரிலைன்ஸ் நிறுவனம் பெற்றது. ஹிந்தியில் ரீமேக்கை இயக்க புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் யாரை மாதவன் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்ற திட்டமிடலில் ஈடுபட்டிருந்தனர் படக்குழு.  குறிப்பாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என பல பிரபலங்களை அணுகியுள்ளனர் படக்குழு. இதற்கிடையில்  கொரோனா ஊரடங்கு காரணமாக விக்ரம் வேதா குறித்த ரீமேக் அறிவிப்பு தாமதமானது.  இந்நிலையில்  இதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.



அதன்படி விக்ரம் வேதா படத்தில்  சைஃப் அலி கான் மற்றும்  ஹ்ரித்திக் ரோஷன்  ஆகியோர் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் சைஃப் அலி கான், மாதவன் கதாபாத்திரத்திலும் ஹ்ரித்திக் ரோஷன் , விஜய் சேதுபதி கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் , படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம்  30 ஆம் தேதி ஹிந்தியில் விக்ரம் வேதா படத்தை  திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் ஒரு கதாநாயகியாக டாப்ஸி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. விக்ரம் வேதா ரீமேக் ஒரு புறம் இருக்க , நேற்று கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியாகி இணையதளத்தை அதகளப்படுத்தி வருகிறது. கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி மூவரும்  மாஸ் லுக்கில் இருக்கும் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


சிலர் இந்த போஸ்டர் விருமாண்டி படத்தில் கமல், நெப்போலியன், பசுபதி ஆகியோர்  இருக்கும்  போஸ்டரை நினைவூட்டுவதாக உள்ளது என  பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலரோ இது விக்ரம் வேதா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் போல உள்ளது  என ட்ரோல் செய்து வருகின்றனர்.






விக்ரம் படம் உலக நாயகன்  கமல்ஹாசனின்  232-வது படமாக உருவாகி வருகிறது.  இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, பகத்ஃபாசில் தவிர அர்ஜூன் தாஸ், நரேன் உள்ளிட்டவர்களும்  வில்லன்களாக ஒப்பந்தமாகியுள்ளனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.