சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது மயிலம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் தனம். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சீனிவாசன். இளைய மகன் சுதாகர். தாயார் தனம் தனது மூத்த மகன் சீனிவாசனுடன் தற்போது வசித்து வருகிறார். இளைய மகன் சுதாகர் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுதாகர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.




சுதாகருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுவுக்கு அடிமையான சூழலில் இருந்த சுதாகர், கடந்த சில மாதங்களாக இணையவழி சூதாட்டமான ரம்மி ஆடி வந்துள்ளார். அந்த ஆட்டத்திற்கு அடிமையான சுதாகர் தன்னுடைய வருமானம் அனைத்தையும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் முதலீடு செய்துள்ளார். அதில் நஷ்டம் அடைந்த சுதாகர் தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் கடன் பெற்று அந்த பணத்திலும் ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். ஒரு கட்டத்தில் சுதாகர் பெற்ற கடன் தொகை லட்ச ரூபாயையும் தாண்டி சென்றுள்ளது.


அப்போதும் இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று மீண்டும், மீண்டும் ரம்மி விளையாட்டிலேயே மூழ்கியுள்ளார் சுதாகர். இதற்காக தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் சுதாகரிடம் பணத்தை திருப்பித் தருமாறு நெருக்கடி அளித்துள்ளனர். இதனால், என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்ற சுதாகர், சொத்தில் தனக்குரிய பங்கை பிரித்து கொடுக்குமாறு தாய் தனத்திடம் கேட்டுள்ளார்.


மகனின் நிலைமையை கண்டு வேதனை அடைந்த தாய், சொத்தில் சுதாகருக்குரிய பங்கான 15 செண்ட் நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார். ஆனால், அதன்பிறகும் திருந்தாத சுதாகர் சொத்தில் தன்னுடைய பங்கு முழுவதையும் தனது பெயரில் எழுதித்தர வேண்டும் என்று தாயாரிடம் சண்டையிட்டுள்ளார். இதுமட்டுமின்றி தினசரி குடித்துவிட்டு வந்து சொத்தில் பங்கு கேட்டு தாய் தனத்தை அடித்து துன்புறுத்தியும் உள்ளார்.


சுதாகருக்கு இரண்டு பெண் குழந்தைகள் என்பதால், சொத்து முழுவதும் சுதாகர் பெயரில் எழுதிவைத்தால் எங்கே ரம்மி ஆடி சொத்தை கரைத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் சுதாகர் பெயரில் சொத்த எழுதிக்கொடுக்க தாய் தனம் தயங்கியுள்ளார். சுதாகரின் செயலினால் கோபமடைந்த அவரது அண்ணன் சீனிவாசன், அவரை கண்டித்து வந்துள்ளார். இதனால், அவ்வப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.




இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல குடித்துவிட்டு வந்த சுதாகர் தாயார் தனத்திடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இல்லாவிட்டால் சொத்தில் எனது பங்கை எழுதிக்கொடு என்று தாயார் தனத்தை சுதாகர் அடித்து துன்புறுத்தியுள்ளார். சுதாகரின் தொல்லை தாங்க முடியாத சீனிவாசன் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக சுதாகர் தலைமறைவானார். போலீசார் விசாரணைக்காக சீனிவாசனின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். போலீசார் சென்ற சிறிதுநேரத்தில் ஆத்திரத்துடன் சுதாகர் அரிவாளுடன் சீனிவாசனை நோக்கி வந்துள்ளார்.


அப்போது, தம்பியுடன் நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த சீனிவாசன் சுதாகரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆத்திரத்தில் தம்பியை கொலை செய்த அண்ணன் சீனிவாசன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.


சுதாகரின் ஆன்லைன் ரம்மி மோகத்தால் அவரது குடும்பமும், தம்பியை ஆத்திரத்தில் கொன்ற சீனிவாசனின் குடும்பமும் பரிதாபமான நிலைக்கு ஆளாகியுள்ளது. இளைய மகனை சடலமாகவும், மூத்த மகனை கொலையாளியாகவும் மாறியிருக்கும் நிலை கண்டு தாய் தனம் உடைந்து போயிருக்கும் நிலை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி மோகத்தால் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.