இதுவரை மொத்தம் ஆறு படங்களை வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார். இந்த ஆறு படங்களும் கதை திரைக்கதை ரீதியாக சிறந்த கலைப்படைப்பாகவும் அதே நேரத்தில் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களாகவும் உள்ளன. மற்ற கமர்ஷியல் கதைகளைப் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட புதிய கதைக்களங்களை படமாக்கி, அதில் தொடர்ச்சியான வெற்றிகளை பெறுவது எந்த மொழி சினிமாவிலும் அவ்வளவு எளிதானதில்லை. இன்று இந்திய சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ஒரு இயக்குநராக வெற்றிமாறன் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் சினிமா என்பதைப் பற்றி அவருக்கு இருக்கும் தெளிவுதான். நேர்காணல் ஒன்றில் வெற்றிமாறன் சினிமாவை இப்படி குறிப்பிடுகிறார்.



” சினிமா என்பது எனக்கு முதலில் வணிகம், அதற்கு அடுத்து அறிவியல் கடைசியாக கலை". இவ்வளவு காத்திரமான படைப்புகளை உருவாக்கும் ஒருவர் ஏன் கலையை மூன்றாவது இடத்தில் வைக்கிறார் என்று நமக்கு சந்தேகம் வரலாம்... இந்த மூன்று அம்சங்களையும் தனது படங்களில் வெற்றிமாறன் எப்படி கையாள்கிறார் என்பதைப் பார்க்கலாம்.


வணிகம்


வெற்றிமாறனை விட வணிக அம்சங்கள் குறைந்த அதே நேரத்தில் நேர்த்தியான கதைகளைக் கொண்ட படங்களை கொடுத்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு வெற்றிமாறனின் குருவான பாலுமகேந்திரா இயக்கிய‘வீடு’ திரைப்படத்தை சொல்லலாம்.


எந்த வித வணிக ரீதியிலான சமரசமும் இல்லாத ஒரு எதார்த்தமான  படம். இன்றுவரை பாலுமகேந்திரா தனது வாழ்நாளில் இயக்கிய சிறந்த படம் என்று சொல்லப்படும் இந்தப் படத்தின் ஃபிலிம்கூட நம்மிடம் பாதுகாத்து வைக்கப்படவில்லை.


இந்தப் படம் பாலுமகேந்திராவிற்கு எந்தவித வணிக ரீதியிலான லாபத்தையும் கொடுக்கவில்லை. வணிகரீதிலியான வெற்றி மட்டுமே ஒரு நல்ல படத்தை மதிப்பிடும் அளவுகோல் இல்லை என்றாலும் ஒவ்வொரு படத்திலும் இயக்குநரைத் தவிர்த்து பல்வேறு மக்களின் உழைப்பு கலந்திருக்கிறது.


பல்வேறு உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், நடிகர்கள், லைட்மேன், இன்னும் எத்தனையோ கடை நிலை ஊழியர்கள் அதில் பங்காற்றுக்கிறார்கள். எண்ணற்ற கனவுகளை சுமந்து வேலை செய்யும் மனிதர்களின் அங்கீகாரம் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்கிறது.


இது எல்லாவற்றுக்கும் மேல் கோடிகளில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. இந்த மாதிரியான சூழலில் ஒரு இயக்குநர் தன்னுடைய மன நிறைவுக்காக தன்னுடைய கலை வெளிப்பாட்டின் முழுமைக்காக மட்டுமே ஒரு படத்தை இயக்குவதின் சாத்தியம் மிகக் குறைவானது என்பதை புரிந்துகொண்டவர் வெற்றிமாறன். எனவே சினிமா என்பது எவ்வளவு நேர்மையான கலைத்தன்மை நிறைந்த ஒரு ஊடகமாக இருந்தாலும் அதை வணிகரீதியாக வெற்றிபெற செய்வதை முதன்மையாக கருதுகிறார்.


அறிவியல்


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. சினிமா என்பது ஒரு கலை என்று சொல்லும் இரு தரப்புகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் சினிமாவை ஒரு சைன்ஸ் என்று வெற்றிமாறன் ஏன் குறிப்பிடுகிறார் ?
வணிக ரீதியிலான வெற்றி அவசியமானது தான். ஆனால் அந்த வெற்றியை வழக்கமான மிகைப்படுத்தப்பட்ட பொய் கற்பனைக் காட்சிகளின் வழியாக இல்லாமல் வேறு வழியிலும் அடையமுடியும் என்பதை சாதித்துக் காட்டியவர் வெற்றிமாறன்.


எந்த ஒரு கலை வடிவத்திற்கும் அதன் சாதக,பாதகங்கள் இருக்கின்றன. புத்தகங்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பலம் என்னவென்றால் வாசிப்பவர் அவரவர் கற்பனை ஆற்றல்களுக்கேற்ற வகையிலான ஒரு சுதந்திரத்தை புத்தகங்கள் அளிக்கின்றன. ஆனால் புத்தகத்தை விட வெகுஜனமாகி இருக்கும் சினிமா இந்த கற்பனைகளை கண்முன் விரித்து பார்வையாளர்களுக்கு காட்டுகிறது.


மனிதனின் கற்பனைகளுக்கு ஒரு வடிவம் கொடுக்கிறது. அப்படி மக்களை சுவாரஸ்யம் கொள்ள வைக்கும் எத்தனையோ கதைகள் இங்கு இருக்கின்றன. கதைகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாயக வழிபாட்டை மட்டுமே படங்களில் பார்த்து வந்த மக்கள், மண் சார்ந்த கதைகளையும், மனித உறவுகளுக்கு இடையில் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான கதைகளையும் பார்க்க எல்லா காலத்திலும் காத்திருக்கிறார்கள் என்பதை வெற்றிமாறன் நம்பினார்.


வெற்றிமாறனின் படங்களின் கதைக்களங்களை எடுத்துப் பார்த்தால் தனது படங்களை சுவாரஸ்யமாக வைத்திருக்க அவர் பயன்படுத்தும் மிகப்பெரிய கருவி மக்களின் வாழ்க்கையில் இருக்கும் அழகியலை  நேரடியான அனுபவமாக பார்வையாளர்களுக்கு காட்டுவது.  சென்னையை வைத்து வடசென்னை, மதுரையை வைத்து ஆடுகளம், கோவில்பட்டியை வைத்து அசுரன் என வெவ்வேறு நிலப்பரப்பின் கலாச்சாரங்களை வெகுஜன ஊடகத்தில் அறிமுகப்படுத்துவன் மூலம் சினிமா மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை கூட்டுகிறார்.


ஒரே இயக்குநர் இத்தனை ஊர்களை வைத்து படம் இயக்குவதே மிக அரிதான ஒரு விஷயம் தான். வெற்றிமாறனின் படங்களை மக்கள் மிக ஆர்வமாக எதிர்பார்ப்பதற்கு காரணமே ஏதோ ஒரு புதிய நிலத்தை புதிய மக்கள் அவர்களின் பேச்சு முறைகளை, புதிய வாழ்க்கை முறைகளை பார்க்கமுடியும் என்கிற கிளர்ச்சிதான்.


ஆடுகளம் முதல்

சினிமாவை வெற்றிமாறன் அறிவியல் என்று சொல்வதற்கு மற்றொரு காரணம். ஒரு குறிப்பிட்ட கதையை தேர்வு செய்து அந்த கதையின் வரலாறு மற்றும் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஒரு உண்மையை,  அரசியலை, நீதியை, அறத்தை அவர் உருவாக்குகிறார். அவரது கதாபாத்திரங்கள், படங்களின் காட்சிகள் தனித்துவமாக நிற்பது இதன் விளைவுதான். தனது படைப்பின் உண்மையை உணர்த்துவதற்காக எந்த சார்பும் இல்லாமல் தனது கதாபாத்திரங்களை எதார்த்தத்திற்கு நெருக்கமானதாக உருவாக்குகிறார்.


சேவல் சண்டை விளையாட்டை பற்றிய ஆடுகளம் படம் மனிதர்களின் மனதில் நடக்கும் வன்முறையின் வெளிப்பாடையே குறிப்பாக உணர்த்துகிறது. அதற்கு குரு - சிஷ்யன் என்கிற இரு முரண்களை அவர் உருவாக்குகிறார். இன்றைக்கு குருவாக இருப்பவன் நாளை காலாவதி ஆகிப்போவான், இன்று மாணவனாக இருபவன் நாளை குருவாக வருவான். இதுவே காலத்தின் மாறாத சுழல் விளையாட்டு. இதை தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மனிதர்கள் தங்களது அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து புதிர் நாடகங்களை நடத்துகிறார்கள்.


விசாரணை மற்றும் விடுதலை படங்களில் காவல் துறையின் வன்முறைகளை நாம் பார்க்கிறோம். ஆனால் இந்தப் படங்கள் உணர்த்துவது காவல்துறை என்கிற அதிகாரத்தின் கருவி செயல்படும் உளநிலையை. அதிகாரத்தின் குறீயிடாக இருக்கும் காவல் துறையில் அறம் என்கிற ஒன்றுக்கு எந்த சூழ்நிலையிலும் இடம் இல்லை. அதில் ஒரு தனிநபரின் அறம் , மனிதநேயம், குற்றவுணர்வு இதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லாமல் போவதையே இந்த இரண்டு படங்களின் உண்மையாக வைக்கிறார் வெற்றிமாறன்.


அதேபோல் வடசென்னை திரைப்படம் வடசென்னை மக்களின் சமகால நிலையை அவர்களின் வரலாற்றின் மூலம் ஆராய்ந்து வளர்ச்சி என்கிற பெயரில் தங்களது நிலத்தில் இருந்து விரட்டப்படுவதை எதிர்த்து கேள்வி எழுப்புகிறது. இந்த மக்களின் மேல் எந்த விதமான முன் தீர்மானங்களும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்துடன் சேர்ந்து படம் பிடித்துக் காட்டுகிறார் வெற்றிமாறன்.


மிக முக்கியமான ஒரு விஷயம் இதை எல்லாம் கருத்தாகத் திணிக்காமால் கதை வழியாக உண்மைகளை உணர்த்துகிறார். எத்தனையோ படங்கள் வெறும் தகவல்களாக புரட்சி பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதை வெற்றிமாறன் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. தனது படங்கள் வெற்று கோஷங்களாக இருந்துவிடக் கூடாது என்கிற தெளிவு அவரிடம் இருக்கிறது.

கலை


சினிமா என்பது கடைசியாக கலை என்று குறிப்பிடுகிறார் வெற்றிமாறன். ஒரு படைப்பின் வணிக ரீதியான வெற்றி, மக்களின் ரசனையின் எதிர்வினையை குறிக்கிறது. அறிவியல் பூர்வமான அணுகுமுறை, ஒரு படைப்பு எந்த அளவிற்கு சமூகத்தில் பிரபதிலிக்கிறது, அதன் வரலாற்று நீட்சி அதன் தரம் உள்ளிட்டவைகளை தீர்மானிக்கிறது. இவையெல்லாம் இணைந்து ஒரு படைப்பாளி தன்னுடைய ஆளுமையின் வழியாக இந்த வாழ்க்கையை, தனது சமூகத்தைப் பற்றிய மேலதிகமாக எந்த ஒரு பார்வையையும் வைக்கும்போது ஒரு படைப்பு கலையாகிறது. வெற்றிமாறனின் படங்கள் நிச்சயம் இந்தக் கூறுகளை கொண்டிருப்பதால் மட்டுமே அவரது படங்கள் தரமான கலை படைப்புகளாகின்றன.