தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடன இயக்குனர் பாப்பி. இவர் தமிழில் மிக பிரபலமான நடன இயக்குநர் பிருந்தாவின் அசிஸ்ட்டெண்ட். பாப்பி இப்போது சூர்யாவின் ரசிகர்களிடம் வைரலாகியிருப்பது தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் மூலம்.
அந்தப் பேட்டியில் பாப்பி பேசிய விஷயங்கள் அப்படியே இதோ, “நேருக்கு நேர் படத்தில் சிம்ரனும், சூர்யாவும் நடித்திருப்பார்கள். எனக்கு பிடித்த ஹீரோயின் சிம்ரன். அவங்க ஸ்டைல், ஆட்டிடியூட், டிரெஸ்ஸிங் எல்லாமே பார்த்து சிம்ரனை எனக்கு பிடித்துவிட்டது. எனக்கு பள்ளிப் படிக்கும் போதிலிருந்தே சூர்யாவை மிகவும் பிடிக்கும்.
காக்க காக்க படத்தில் பிருந்தா மாஸ்டருக்கு அசிஸ்ட்டெண்டாக இருந்தேன். அந்தப் படத்தின்போது எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. ‘என்னை கொஞ்சம் மாற்றி ’பாடலில் சூர்யாவும், ஜோதிகாவும் ஜீப்பில் வரும் சீன் ஷூட்டிங் ஈசிஆர் சாலையில் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு பேப்பரில், ‘சூர்யா நீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்கள காதலிக்கிறேன்’ என்று எழுதி, சூர்யாவிடம் சென்று, உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறினேன்.
அதற்கு சூர்யா; சொல்லுங்க பாப்பி என்ன விஷயம் என கேட்டார். அப்போது நான் எழுதிய காதல் கடிதத்தை நீட்டினேன். இதில் என்ன இருக்கிறது என சூர்யா என்னிடம் கேட்டார். நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொன்னேன்.
அதைக்கேட்ட சூர்யா, அங்கிருந்த கேமராமேன், ஜோதிகா, பிருந்தா மாஸ்டர் என அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துவிட்டனர். அப்போது சூர்யா, ‘சாரி பாப்பி, நான் ஜோதிகாவ லவ் பண்றேன்’ என சிரித்தபடியே கூறினார். அப்போது ஜோதிகா, என்ன பாப்பி கொஞ்சம் முன்னாடி சொல்லிருக்கலாம்ல என்று சிரித்துக்கொண்டே கேட்டார்” என்று பாபி கூறினார்.
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் திருமணம் செய்து மும்பையில் வசிப்பார்கள். அந்த சுழலில் இருவரும் மின்சார ரயிலில் செல்லும்போது, கல்லூரி படிக்கும் இளம்பெண் ஒருவர், சூர்யாவிடம் சென்று தனது காதலை கூறுவார். அப்போது சூர்யா எனக்கு எல்லாம் ஓகேதான் ஆனா எனக்கு ஒரே ஒரு தடவை கல்யாணம் ஆயிடுச்சே என சூர்யா கூற அப்போது ஜோதிகா தனது உண்மையான காதலையும், சூர்யா மீது தனக்கு இருக்கும் உணர்வையும் நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்