மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை ’இதயத்தில் நீ’ படத்துக்காக முதன்முதலில் சந்தித்தபோது ‘பூவரையும் பூங்கொடிக்கு பூமாலைபோடவா பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா’ என்ற பல்லவியை வாலி சொன்னதும், பாடிப்பார்த்த எம்.எஸ்.வி. 'பூங்கொடிக்கு…' என்ற வார்த்தை சரியில்லை என்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் ’பூங்கொடியே’ என்று மாற்றிக் கொடுத்திருக்கிறார் வாலி. அந்தத் திறமைதான் விஸ்வநாதனின் இதயத்தில் கண்ணதாசனுக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் வாலியை உட்கார வைத்தது என்று கூறுவார்கள். ‘கற்பகம்’ படப் பாடல் கம்போசிங்கில்கூட, தான் ஆர்மோனியத்தில் இருந்து விரல்களை எடுப்பதற்குள் பாட்டுக்கு வரிகளை வாலி கொடுத்த வேகம்தான் மெல்லிசை மன்னரை மிரள வைத்தது. அப்படி இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் நம் கேஸட்டுகளையும் நெஞ்சங்களையும் நிரப்பின, அவை உருவான வரலாற்றை அவர்கள் இருவருமே பேசிக்கொள்ளும் முத்தான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.



வாலி ஆயிரம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்எஸ் விஸ்வநாதன், நான் அவருடைய பெரிய ரசிகர் நான் என்ன கேள்வி உங்களை கேட்கமுடியும் என்றும், நான் இந்த இடத்தில் இருப்பதே நீங்கள் போட்ட பிச்சை என்று வாலி சொல்ல, அதெல்லாம் சொல்ல கூடாது எல்லாம் கடவுளுடைய செயல் என்று எம்எஸ்வி வாயில் அடித்துக்கொள்ள சில நிமிடங்கள் இருவரும் பரஸ்பரம் மாறி மாறி புகழ்ந்து கொண்டதும் தன்னை தானே அவ்வளவு பெரிய கலைஞர் முன் தாழ்த்திக் கொண்டதும் இன்றைய தலைமுறையில் சினிமா வெளிச்சம் வந்தது மேடை ஏறி பிதற்றுபவர்கள் கேட்டு கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள். இருவரும் அவரவர் துறையில் ஜாம்பவான்கள் என்றாலும், அடுத்தவரை விட்டுக்கொடுக்காமல் பேசும் பாங்கு வியக்கத்தக்கதாக இருந்தது. அதற்கான காரணத்தையும் அவர்களே கூறினார், அவர்கள் இருவருக்குள்ளும் ஈகோ இல்லை என்று கூறினர். இவர் வரிகள் சரி இல்லை என்று கூறினால் மாற்றிக்கொடுபாராம், அவர் இந்த இடத்தில் சரணம் சரி இல்லை என்று சொன்னால் அவர் மாற்றுவாராம், இருவரும் அந்த விஷயத்தில் கோபித்துக்கொண்டதே இல்லை என்று கூறினர். 



அப்போது இருவரும் பேசிக்கொண்டது,


வாலி: நாம் இணைந்து உருவாக்கிய பல பாடல்கள் மெட்டுக்கு பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று யாருக்கும் தெரியாது.


எம்.எஸ்.வி: ஆமாம், ஆனால் பல பாடல்கள் மேட்டுக்கு எழுதியதுதான்.


வாலி: ஆமாம் நீங்கள் தான் என் குரு, அண்ணா சொல்லுவார், யானை தன் குட்டியை தண்ணீரில் தள்ளி விட்டு தள்ளி விட்டு பழக்குமாம், குட்டி யானை பயப்படும், அதனால் பயம் போக தள்ளி விடும், அண்ணா தன்னை குட்டி யானை என்றும் பெரியார் தான் என்னை தள்ளிவிட்ட தாய் யானை என்றும் சொல்லுவார். இங்க நான்தான் குட்டி யானை, நீங்கள் தான் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு பழக்கியவர். உங்களிடம் இருந்து எழுதியதால்தான் எந்த சந்தத்திலும் எழுத பழகினேன், நீங்கள் போடாத சந்தமா!...


எம்.எஸ்.வி: அதுதான், அந்த பாடல்கள் அனைத்திலும் சந்தமும் இருக்கும், வரிகளும் அருமையா இருக்கும், அதனால் தான் இதெல்லாம்…


வாலி: இல்ல அதற்கு காரணமும் இருக்கு, நீங்க எழுதுரவரையும் சும்மா விட மாட்டீங்க, பாடுறவரையும் சும்மா விட மாட்டிங்க, ஆர்கெஸ்ட்ரா காரணையும் சும்மா விட மாட்டிங்க, அவங்க யாராவது கோவபட்டாலும் நீங்க கோவப்பட்டு நான் பத்ததில்ல, உங்களுக்கும் டிஎம்எஸ்க்கும் சண்டையெல்லாம் வந்து நான் பத்துருக்கேன், அவர் கோவப்பட்டு கெளம்புறப்ப எல்லாம் நீங்க கோவப்படாம சிரிச்சு சமாளிச்சு வேலை வாங்குறதெல்லாம் பாத்திருக்கேன்.


எம்.எஸ்.வி: டீம் ஒர்க்தான், எல்லாரும் சேர்ந்து பார்த்த வேலை தான் நான் இருக்குறதுக்கும் காரணம்!


வாலி: இருபதாம் நூற்றாண்டுல உருவான ஆகச்சிறந்த கலைஞன்னு நான் எல்லா மேடைலயும் சொல்லுவேன்.


என்று பேசிக்கொண்டனர்.