”ஏனுங்க .. இந்த பாம்பு புத்துக்குள்ள கைய விட்டீங்களே.. பாம்பு கொத்தலையா .. “ என்னும் வசனத்தை பேசி பிரபலமடைந்த அனு மோகனை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு நினைவுப்படுத்துதலுக்காக  கூறினேனே தவிர அனுமோகன் தமிழ் சினிமாவில் ஆற்றிய பங்கு ஏராளம். மிகச்சிறந்த இயக்குநர்களுள் ஒருவர் அனுமோகன். 1987 ஆம் ஆண்டு வெளியான இது ஒரு தொடர்கதை என்னும் சிறந்த திரைப்படம் மூலம் இயக்குநராக கால் பதித்தவர். எம்.ஜி.ஆர் ஒரு முறை இவரது படத்தை பார்த்துவிட்டு , நீங்களா படத்தின் இயக்குநர். முதிர்ச்சியான கதை , வயது மூத்தவராக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆக்கப்பூர்வமான பணி, இது அமோக வெற்றி என்றாராம். அதன் பிறகு நினைவுச்சின்னம் , மேட்டுப்பட்டி மிராசு , அண்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் , நிறைய படங்களில் காமெடி , குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மிகச்சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. இவர் அண்மையில் கலந்துக்கொண்ட பேட்டி ஒன்றில் தனது திரைப்பட பயணம் குறித்து பேசியிருந்தார். அதில் இன்றளவும் பிரபலமான கவுண்டமணி , செந்தில் காமெடியான பெட்ரோமாக்ஸ் கதை உருவான விதம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.





அதில் “வைதேகி காத்திருந்தால் திரைப்படத்தில்  அந்த காமெடி வச்சிருந்தோம். பொதுவா அந்த காலத்துல அரசியல் பேசும் இடம் எதுவாக இருக்கும்னா  பார்பர் ஷாப், சைக்கிள் கடை  இல்லைனா டீக்கடையில. அதுலையும் அந்த சைக்கிள் கடை அனுபவம் எங்களுக்கு கொஞ்சம் அதிகம். அதுனால அந்தமாதிரியான காட்சியை வைக்க திட்டமிட்டோம். இயக்குநர் சுந்தர்ராஜன்தான் கடைக்கு ஆல் இன் ஆல் அழகுராஜானு பெயர் வச்சாரு. ஏன்னா பாக்கியராஜோட உதவிய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அழகுராஜா. சினிமாவை கரைத்து குடித்தவன் போல பேசுவான். அதுனாலதான் அந்த பெயரை வைத்தோம். ஒரு சில காட்சிகளை எடுத்துவிட்டோம். அதன் பிறகு இயக்குநர் திலீப் குமார் சொன்னார். சார் சைக்கிள் கடைனா பெட்ரோமாக்ஸ் லைட்லாம் இருக்கும் . அதையெல்லாம் தொங்க விடுங்க என்றார் சுந்தர். அப்போதுதான் அசிஸ்டண்ட் ஒருவர் , இப்படித்தான் சார் ஒருமுறை பெட்ரோமாக்ஸ் லைட் உள்ள சாம்பலா இருக்கும்னு தெரியாமை உடைத்துவிட்டேன். எங்க அப்பாக்கிட்ட அடிவாங்கினேன் என சொன்னார். அப்படியே அந்த காட்சியை உடனடியாக எடுத்தோம் அது இன்றைக்கு வரையிலும் பேசப்படுகிறது. அதன் பிறகு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமானு சொன்னதெல்லாம் கிரியேட் பண்ணதுதான். பிளான் பண்ணியெல்லாம் அந்த காட்சிகளை எடுக்கவே இல்லை. ஸ்பாட்ல சொன்ன ஒரு கதையை படமாக பண்ணும் திறமை இயக்குநர், அசிஸ்டெண்டுக்கெல்லாம் அப்போ இருந்துச்சு“ என சுவாரஸ்ய பக்கத்தை பகிர்ந்திருக்கிறார் அனுமோகன்