கமலின் விக்ரம் பிரமாண்ட வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை இந்தக்கட்டுரையில் அலசலாம்


கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான  ‘விக்ரம்’ திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று கோடிகளை குவித்திருக்கிறது. அதில் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார் கமல். அதன் பிரதிபலிப்புதான் நேற்று சென்னை ரேஸ் கோர்ஸ் கிளப்பில் நடந்த சக்ஸஸ் மீட்டும் அதன் பிறகு கொடுக்கப்பட்ட தடபுடலான விருந்தும். 




கமலின் ஆர்.கே. இன்டர்நேசனலில் எது சரியாக இருக்கிறதோ இல்லையோ.. ஆனால் சாப்பாடு மட்டும் தரமா இருக்கும் என பல கலைஞர்கள் கூற கேட்டிருக்கிறோம். அதை நேற்று கண்கூடாகவே பார்க்க முடிந்தது. காரணம் மெனு அப்படி. 


அப்படி ஒரு விருந்து 


அசைவ பிரியர்களுக்கு கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் ஸ்பெஷல் பன் பரோட்டா, மதுரை மட்டன் கறி தோசை, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, நாட்டுக்கோழி சூப், பள்ளிப்பாளையம் சிக்கன் எனவும், சைவபிரியர்களுக்கு வெஜ் சோயாட்டா பிரியாணி, கோவக்கா சட்னி, கொய்யா சட்னி, பள்ளிப்பாளையம் வெஜ் கிரேவி, முட்டை தோசை, வெங்காய தோசை, மைசூர் மசாலா தோசை எனவும் சாப்பிட்டு விட்டு ரிலாக்ஸ் செய்ய ஃப்ரூட் வகைகள், ஐஸ்கிரீம், சுக்கு பால், ஸ்வீட் பீடா என ஒரு பிடி பிடிக்க வைத்து விட்டார்கள். இந்த பிரம்மாண்ட வெற்றி சாத்தியமானது ‘விக்ரம்’ ஒரு நல்ல படம் என்பதால் மட்டுமல்ல. 


படத்தை முதன்முறையாக தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கிறார் கமல்.. லோகேஷ் கமல் என்ன சொல்லப்போகிறார் என்ற பதற்றத்தில் நின்று கொண்டிருக்க, கமல்  ‘இட்ஸ் வொர்க் பார் மீ’ என்று சொல்லி சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்..



அப்போதே கமலுடன் இந்தப்படத்தை இணைந்து தயாரித்த மகேந்திரனும், டிஸ்னியும் படத்தின் ப்ரோமோஷனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்து விட்டார்கள். அதற்கு காரணம், அதற்கு முன்னதாக வெளிவந்து பெரிய வெற்றியை பெற்ற ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் படங்களின் பிரோமோஷனும், அதற்கு கிடைத்த வரவேற்பும் என்றே சொல்லப்படுகிறது. 


மாஸ்டரில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு ஹைப்பை ஒரு பக்கம் லோகேஷ் ஏற்றிவைத்திருந்த நிலையில், முதற்கட்டமாக ட்ரெயினில் விக்ரம் படத்தின் போஸ்டரை ஒட்டி பிரோமோஷனை ஆரம்பித்தது ராஜ் கமல் நிறுவனம்.




தொடர்ந்து அவ்வப்போது படம் குறித்தான அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த விக்ரம் டீம், தொடர்ந்து ஒரு மேக்கிங் வீடியோ வெளியிட்டு “ இது ஒரு பிக்கஸ்ட் ஆக்சன் எண்டர் டெய்னர்” என்பதை அழுத்தமாக பதிவு செய்தது. 


                                           


அதில் லோகேஷ் மைக்கை ஒரு பக்கம் சுழற்ற கமலை டைரக்ட் செய்ய, பல இளைஞர்கள் என்னய்யா... நானும் லோகேஷ் மாதிரி ஒரு டைரக்டர் ஆகப் போறேன் என்று கமெண்டுகளை தட்ட ஆரம்பித்தனர். அதன் பின்னர் லோகேஷ் எது பேசினாலும்  வைரலானது. அதனைத் தொடர்ந்துதான் படம் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு சென்றது. 



அப்படியே தொடர்ந்து ஆடியோ லாஞ்சும் நேரு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. கமல், விஜய்சேதுபதி, பா.ரஞ்சித், உதய்நிதி என பலரும் பங்கேற்க, ட்ரெயிலைரையும் வெளியிட்டார் கமல்.  ‘பற்ற வைச்சிட்டேயே பரட்ட’ என நாலாபுறமும் விக்ரம் ட்ரெய்லர் பற்றி எரிய, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ரஞ்சித் மதுரையில் கோர்ட் ஷூட்டோட கமல இயக்க ஆசை என இன்னொரு பக்கம் பற்ற வைத்தார். 


தன் பங்குக்கு கமல் மிரட்டுனா பயப்படுற ஆள் இல்ல என உதய் ஹைப் ஏற்ற, அப்படியே சோசியல் மீடியாவில் லீக்கான சூர்யாவின் சில கிளிப்பிங்ஸை பற்றி பேசிய லோகேஷ்.. சூர்யா இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல சூர்யா ரசிகர்களும்.. விக்ரம் கிரேட் எக்ஸ்பெக்டேஷன் அணியில் சேர்ந்து கொண்டனர். இதனால் எங்கும் விக்ரம் மேனியாகவே இருந்தது. ரிலீஸ் நெருங்க.. நெருங்க ஹைப்பும் ஏறிக்கொண்டே சென்றது.. 




தொடர்ந்து லோகேஷ் நேர்காணல்கள் கொடுக்க ஆரம்பிக்க, சமூக வலைதளங்களெல்லாம் லோகேஷ் மேனியாவாக மாறி நின்றது.. போறபோக்கில் அது நெல்சனையும் சக்கையாக  வைத்து செய்தார்கள் நெட்டிசன்கள்.. அவர் கொடுத்த பேட்டிகளும், அதில் அவர் பேசிய விதம்.. ச்சே இந்த மனுஷனக்காகவாது இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்று பலரை நினைக்க வைத்தது.  


படம் வெளியாகி முந்தைய நாள் இரவு கமலை பற்றி நெகிழ்ந்து கைதியை ஒரு முறை மறுபார்வை பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்ல..எக்கச்சக்க எதிர்பார்ப்போடு தியேட்டருக்குள் நுழைந்தார்கள் ரசிகர்கள்.






படம் நன்றாக வந்து விட... கே.ஜி.எஃப்.. ஆர்.ஆர்.ஆர் படத்தின் மீதிருந்த தமிழ் சினிமா ரசிகர்கள் .. விக்ரமை கொண்டாடி தீர்த்தார்கள்..


                                                 


தொடர்ந்து சத்யம் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் “ இந்த மாதிரி வெற்றியை எனது வாழ்கையிலே பார்த்ததில்லை” என்று துள்ளி குதித்தார். தொடர்ந்து லோகேஷூக்கு கார், அசிஸ்டெண்டுகளுக்கு பைக் என கிப்ட் கொடுத்து விக்ரம் ஃபீவரிலேயே ரசிகர்களை வைத்த கமல், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ஸ் கொடுத்து சிலிர்க்க வைத்துவிட்டார்.










இப்படி எங்கும் பார்த்தாலும் விக்ரம் விக்ரம் என விக்ரம் வைபே போய் கொண்டிருக்க.. நேற்று நடந்த சக்ஸஸ் மீட்டில் விநியோகிஸ்தர்கள் படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்று டேட்டாவை அடுக்க, நானும் சொல்றேன் என்று மைக்கை பிடித்த உதய் ஷேர் மட்டும் 75 கோடிக்கும் மேலே வந்திருக்கிறது என்றார்..




கடைசியாக மைக்கை  “ கடந்த 10 வருஷத்துல நான் எந்த பிரச்னையும் சந்திக்காம ரிலீஸ் பண்ண படம் இதுதான் என்று பேசி ரெட் ஜெயண்ட் மூவிஸூக்கு நன்றி” என்றார்.. இதன் மூலம் கடந்த காலங்களில் கமல் சந்தித்த எந்த சங்கடங்களையும்  அவரை சந்திக்கவிடாமல் இந்தப்படம் ரிலீஸ் ஆனதற்கு உதயநிதியும் ஒரு காரணம் என்பது தெளிவாக தெரிந்தது.