நடிகர் கமல்ஹாசன் தன்னை முத்தமிட்ட புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அந்தப்பதிவில் நன்றி உலகநாயகன் கமல் சார் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். 






‘விக்ரம்’படம்  பிரமாண்ட வெற்றியை பெற்றதையடுத்து இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன்.  இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில்  நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


உதயநிதி பேசியது 


மேடையில் பேசிய உதய நிதி, “  டான் படத்தின் வெற்றி விழாவில் சில உண்மைகளைச் சொன்னேன். அதே போல இங்கும் சில உண்மைகளை சொல்லப்போகிறேன். கமல் சார் எனக்குத்தான் முதலில் படம் போட்டு காண்பித்தார். நாங்கள் நான்கு பேர் படம் பார்த்தோம். படத்தின் இடைவேளை காட்சியை பார்த்ததும் அனைவரும் ஷாக் ஆகிவிட்டோம்.  காரணம் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு இடைவேளையை  நான் இதுவரை பார்த்ததில்லை. அப்போதே இந்தப் படம் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.


ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்க வில்லை. இந்தப் படம் இதுவரை 75 கோடி ரூபாய் ஷேரை தாண்டி வசூல் செய்துள்ளது. இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் இவ்வளவு வசூல் செய்ததில்லை. அடுத்த படத்திலும் இதே மாதிரி பெரிய வெற்றியை கொடுக்க லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்துகள்.” என்று பேசியிருந்தார். 


கமல்ஹாசன் பேசியது 


இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாவுலகில் நுழைந்த போது எனக்கு நடிப்பில் பெரிதாக ஆசை இல்லை. ஆனால் நடிக்க ஆசை காட்டியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர் தான் என தெரிவித்தார். 


மேலும் கடந்த  10 வருசத்துல எந்த பிரச்சனையும் இல்லாம ரிலீஸ் பண்ண விட்ட படம் இதுதான் என தெரிவித்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போன போது எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. ஆனால் அது படத்தின் ப்ரோமோஷனுக்கு நன்கு உதவியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸூடன் பணிபுரிய தான் விரும்புவதாக கமல் தெரிவித்தார்.