தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் அட்லீ. சமீபத்தில் வெளியான அவரின் 'ஜவான்' திரைப்படத்தின் அபார வெற்றியால் இந்திய சினிமா வரிசையில் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டு வருகிறார்.


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த அட்லீ இதுவரையில் தெறி, மெர்சல், பிகில் மற்றும் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தோடு சேர்த்து ஐந்து திரைப்படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் அவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்கள். 


குவியும் வாய்ப்புகள்: 


முதன்முறையாக ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த பிறகு அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதே சமயத்தில் தற்போது கோலிவுட்டில் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் மற்ற இயக்குநர்களில் இருந்து அட்லீ எப்படி வேறுபட்ட ஸ்டைலில் படத்தை இயக்குகிறார் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன. 


 




தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிக டிமாண்ட் உள்ள இயக்குநர்களாக கருதப்படும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்களுடன் கம்பேர் செய்து பார்க்கையில் அட்லீயின் திரைப்பட பாணி சற்று வித்தியாசமாக இருக்கும். இது குறித்து அவரே ஒரு நேர்காணலின் போது விளக்கமளித்து இருந்தார்.


“என்னுடைய படங்கள் குறித்து மக்கள் முன்வைப்பது ஒரே ஒரு விமர்சனமாக இருக்கும். அவரின் படங்களில் பிளாஷ்பேக் ஸ்டோரிகள் ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கிறது என்பது தான் அவர் இதுவரையில் எதிர்கொண்ட விமர்சனமாக இருந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ், பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்களின் திரைப்படங்களில் தயாரிப்பு ஸ்டைல், சமூக பிரச்சனை, ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்டவையின் கலவையாக வித்தியாசமாக இருக்கும். 


கமர்ஷியல் தான் என் ஸ்ட்ரென்த் :


ஆனால் என்னுடைய திரைப்படங்களை பொறுத்தவரையில் பிரமாண்டமான திரைக்கதை, ஸ்டார் நட்சத்திரங்கள், கமர்ஷியல் சினிமா இவற்றில் தான் அதிக நம்பிக்கை கொண்டவன். அப்படி இருக்கையில் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்வது என்பது சகஜம் தான். என்னுடைய படம் பார்க்க வரும் பார்வையாளர்களை மகிழ்விப்பதும் என்டர்டெயின் செய்வதும் தான் என்னுடைய நோக்கம். என்னுடைய படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்கள் அதை உணர்வார்கள். அதுவே என்னை இதுவரையில் வெற்றி அடையச் செய்துள்ளது என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார் அட்லீ. 


தமிழ் சினிமாவின் மற்ற முன்னணி  இயக்குநர்களுடன் நட்பு ரீதியாக நல்ல ரேப்போ வைத்திருக்கும் அட்லீ தனது திரைப்பட தயாரிப்பு மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது பாக்ஸ் ஆபிஸிலும் வெளிப்படுகிறது. 


அட்லீ  - அல்லு அர்ஜுன் காம்போ :


இயக்குநர் அட்லீ அடுத்ததாக புஷ்பா புகழ் அல்லு அர்ஜூனுடன் இணைய உள்ளார் என பரவி வரும் தகவலுக்கு பதிலளிக்கையில் "அல்லு அர்ஜூன் என்னுடைய மிக நல்ல நண்பர். நாங்கள் இருவரும் அவரவர் படைப்புகள் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம்.


நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதத்துடன் சரியான ஸ்கிரிப்ட் அமைந்தால் இணைவோம். அது குறித்த யோசனை உள்ளது. கடவுளின் ஆசீர்வாதத்திற்காக காத்திருப்போம்" எனக் கூறியுள்ளார் அட்லீ. அப்படி அட்லீ - அல்லு அர்ஜூன் காம்போவின் ஒரு படம் உருவானால் அது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.