சினிமா உலகில் 'தல’என்றால் அது அஜித் என்பது நாம் அறிந்ததே. தீனாவில் ஆரம்பித்த அந்த அடைமொழி இன்று வரை தொடர்கிறது. அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ என்ற சொல்தான் தாரக மந்திரம். திரையங்குகளிலும், விழா மேடைகளிலும் ஏகோபித்த கரகோஷங்களை வாங்கிய அந்த அடைமொழி இனி தனக்கு தேவையில்லை என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அஜித். அதில் “ இனி வரும் காலங்களில் என்னை எழுதும் போதோ, என்னைப் பற்றி குறிப்பிடும் பேசும் போதோ என இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ  அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்றும் தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.


 


முகவரி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், உன்னைக் கொடு என்னைத் தருவேன் போன்ற படங்களில் நடித்து வந்த அஜித் அறிமுக இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்த தீனா படத்தில் கை கோர்த்தார். 


அதுவரை மிக சாஃப்டான கேரக்டர்களில் நடித்து வந்த அஜித், மாஸ் ஹீரோவாக தீனா படத்தில் களமிறங்கினார். அஜித்திற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்த படத்தில்தான் தல என்ற அடைமொழியும் வந்து சேர்ந்தது. ஆரம்ப காட்சியிலேயே நடுரோட்டில் வில்லன் ஒருவரை புரட்டி எடுக்கும் அஜித்தை, ‘மகாநதி ஷங்கர்’  பார் ஒன்றிற்கு அழைத்துச் செல்வார். அங்கு அஜித்தை தல என்று பல முறை அழைப்பார். அங்கு தொடங்கிய அந்தப் அடைமொழி படத்தின் பல இடங்களில் வரும். இந்தப் பெயர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக அன்றிலிருந்து அஜித் ரசிகர்களால் தல எனக் கொண்டாடப்பட்டார். 



 


இந்த பெயரை எப்படி வைக்க வேண்டும் என்று தோன்றியது என்று நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர். முருகதாஸிடம் கேட்கப்பட்டது. அவர் அப்போது  அளித்த பதில் இதோ.. 




“ என்னோட ரூம்மில் மோகன் என்பவர் இருந்தார். அவரது சொந்த ஊர் தாம்பரம். அவருக்கு பல ரவுடிகளுடன் தொடர்பு இருந்தது. அவர் என்னிடம் சம்பவம் ஒன்றை சொன்னார். அந்த சம்பவத்தில் ஒரு ரவுடி கும்பல் ஒருவரை வெட்ட சென்றுள்ளது. வெட்டும் நேரத்தில் அந்த நபர் ஒரு கடவுளின் பெயரை சொல்லி கத்தியிருக்கிறார். அவர் வேண்டிய கடவுள், வெட்ட போனவருக்கு மிக பிடித்தமான கடவுளாக இருந்த நிலையில், அந்த நபர் அவரை நான் வெட்டமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இதனைக் கேட்ட பக்கத்தில் இருந்த ரவுடி ஒருவர்  ‘தள்ளு தல’ நான் வெட்றேன் என்று அந்த நபரை வெட்டினாராம். இந்தக் கதையை அவர் என்னிடம் சொன்ன போது அது என்ன தல என்று அழைக்கிறீர்கள் என்று மோகனிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் இங்கெல்லாம் தலைவன்  என்பதை தல என்றுதான் அழைப்போம் என்று கூறினார். அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் தான் அந்தப் பெயரின் நான் வைத்தேன்” என்றார். அந்த  ‘தள்ளு தல’ தான் பின்னர் தலயாக மாறியது.