நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பிறகு தற்போது அவர் நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இளைய தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'பீஸ்ட்' திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் தான் 'ஜெயிலர்'. இப்படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினிகாந்த் ஜோடியாகிறார் நடிகை தமன்னா.

 

 

70 சதவீதம் முடிந்தது :

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

 

 

அமோகமான வரவேற்பு :

அந்த வகையில் ஜெயிலர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்காக நேற்று மாலை ஜெய்சால்மர் விமான நிலையத்தை சென்றடைந்த ரஜினிகாந்த் பின்னர் அவர் தங்கும் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு ஹோட்டல் ஊழியர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஆடல் பாடலுடன் அமோகமான வரவேற்பை கொடுத்தனர். லுங்கி டான்ஸ் என்ற பாடலுக்கு நடனமாடிய ஹோட்டல் ஊழியர்களை பார்த்த ரஜினிகாந்த் திகைத்துப்போனார். அந்த பாடலில் தலைவா எனும் வரும் போது அனைத்து ஊழியர்களும் ஒன்றாக சேர்ந்து தலைவா என கூறி வாழ்த்தினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர் ஒருவர் "இந்த வரவேற்பிற்கு அவர் தகுதியானவர்" என பதிவிட்டுள்ளார்.  

 

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.