அமேசானில் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் மலையாளத் திரைப்படம் Home. எதார்த்த கதைகள் மூலம் மனதைக் கவரும் சினிமா பட்டியலில் ஹோம் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் பலரு கருத்து பதிவிட்டு வருகின்றனர். ‘பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென்’ மற்றும் ‘ஜோ அண்ட் தி பாய்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய
ரோஜின் தாமஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். தலைப்புகளில் வித்தியாசத்தைக் காட்டும் ரோஜின் இப்படத்துக்கு #home எனப் பெயரிட்டு கவனிக்க வைத்துள்ளார். டிரெண்டுக்கு ஏற்றது போல, ஸ்மார்ட் ஃபோனால் வரும் பிரச்சனைகள், உறவுகளுக்குள் விழும் விரிசல்கள், வீடியோ அழைப்புகள் வழியே சண்டை, விவாதம், அன்பு, பாசம் என அனைத்தையும் கடத்துவது எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துகின்றது என்பதை இப்படம் பாடமாக சொல்லாமல், இயல்பாக சொல்லியுள்ளது. மொபைல் ஃபோன் அடிக்ஷன், குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பது, அப்பா - மகன் உறவு என நிறைய சப்ஜக்ட் பேசியிருந்தாலும், அனைத்தும் ஒன்றோடு ஒன்று இயக்குநர் இணைத்திருக்கும் விதம், பார்ப்பவர்களையும் படத்தோடு இணைத்தே வைத்திருப்பதாக பாசிட்டிவாக இணையத்தில் குவிகிறது கமெண்டுகள்.
'ஓலிவர் ட்விஸ்ட்' என்ற பெயர் கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ், படம் முழுக்க தனது அசாத்திய நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்தும், இந்திரன்ஸ் நடிப்பு குறித்தும் சிலாகித்து பேசியுள்ளார் இயக்குநர் ரோஜின் தாமஸ். அதில், இந்தப்படத்தின் கரு எனக்கு 7 வருடங்களுக்கு முன்னதாகவே உருவாகிவிட்டது. 7 வருடங்களுக்கு முன்பு என் தந்தை என்னிடம் வந்து செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யச் சொல்லி கேட்டார். அவர் இப்படத்தில் வரும் இந்திரன்ஸ் மாதிரிதான். நான் அவருக்கு எப்படி ரீசார்ஜ் செய்வது என சொல்லிக் கொடுத்தேன். எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டுமெனதை தன்னுடைய டைரியில் குறித்துக்கொண்டார். பின்பு ஒருமுறை அவரை முயற்சி செய்ய சொன்னேன். அவரும் மிகச்சரியாக அதனை செய்தார். அப்போது அவரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் அதுவரை பார்த்ததே இல்லை.இங்கு என் தந்தையை போல பலர் உள்ளனர். திடீர் டிஜிட்டல் வளர்ச்சியால் அவர்கள் தங்கள் குழந்தைகளோடு ஒன்ற முடியவில்லை. அப்போது என்னிடம் கதை இல்லை. ஆனால் கதைக்கான கரு இருந்தது. நான் இதனை விஜய் பாபுவிடம் கூறினேன். நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இப்படித்தான் #home உருவானது.
ஓடிடி ரிலீஸ் குறித்து பேசிய இயக்குநர், இப்படம் தியேட்டர் ரிலீஸூக்காகவே எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா அனைத்தையும் மாற்றிவிட்டது. ஆனால் ஓடிடியும் மக்களிடத்தில் சென்று சேர பயனுள்ளதாகவே இருக்கிறது. பெரிய நடிகர்கள் யாரும் இல்லை என்பதால் தியேட்டரில் முதல் நாளே இப்படம் வசூலை குவிக்காது. மக்கள் பேசத்தொடங்கிய பிறகே படம் வசூல் கூடும்.என்னைப் போலவான இயக்குநர்களுக்கு ஓடிடி சிறந்த வழிதான்.
படத்தில் அதிகம் கவனிக்க வைத்த இந்திரன்ஸ் குறித்து பேசிய இயக்குநர், இந்திரஸ் 40 வருட சினிமா அனுபவம் கொண்டவர். ஆனால் 40 வருடத்தில் நடிக்காத ஒரு கதாபாத்திரமாக இது இருக்கும். திரையில் நான் அவரைப் பார்க்கும் பொழுது என் தந்தையைப் பார்ப்பது போலவே இருக்கும் என்றார்