1990-2000 கால காட்டங்களில் குழந்தைகளுக்கு பிடித்த படங்களாக நடித்து அவர்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிய நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர். ஹாலிவுட் உலகில் பிரபல நடிகராக திகழும் பிரெண்டன் தமிழகத்தில் பிரபலமானது “தி மம்மி” படத்தின் மூலமாகத்தான். விஜய் டிவியில், தி மம்மி படத்தை தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பும் போதெல்லாம் தொலைக்காட்சியின் முன் வாயைப் பிளந்து கொண்டு நம்மில் பலர் உட்கார்ந்து கொள்வோம். இதில், இவர் வில்லன்களை எதிர்த்து சண்டையிடும் விதமும் உடல் மொழியும் காண்பவர் பலரையும் மயக்கியது.




இதற்கு முன்னதாக இவர் நடித்த படம் ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள். காட்டில் வாழும் மனிதனை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், இடுப்பில் ஒரே ஒரு சின்ன துணியை கட்டிக்கொண்டு உலா வரும் இவரை பலருக்கும் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. பிரெண்டனின் குழந்தை தனமான நடிப்பும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும் பலரது ஃபேவரட். இவர், இப்படத்தில் நடிப்பதற்காக தான் பட்டினி கிடந்ததாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 


‘ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள் படத்தில் நடிப்பதற்காக..’


1997ஆம் ஆண்டில் வெளியான படம் ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள். இந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தது படத்தின் ஹீரோ பிரெண்டன் ஃப்ரேசர் என்பது பலரது கருத்து. இவர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.


அதில், “ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள் படத்தில் எப்படி அவ்வளவு ஃபிட் ஆன உடற்கட்டுடன் இருந்தீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள் படத்தில் நடிப்பதற்காக கார்போ ஹைட்ரேட்  (மாவுச்சத்து) சம்பந்தமான உணவுகளை உட்கொள்ளாமல் பட்டினி கிடந்தேன்” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எனக்கு மிகவும் பசித்தது. அதனால் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்றேன். ஆனால் நான் மிகவும் பசியோடு இருந்ததால் எனக்கு பின் நம்பர் மறந்து விட்டது” என்று கூறியிருக்கிறார் ப்ரெண்டன். 




கம்-பேக் கொடுக்கும் ஹீரோ:


1990லிருந்து 2000 வரை பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பிரெண்டன், தனது வாழ்கையில் நடந்த சில சம்பவங்களினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். முக்கியமாக, ஹாலிவுட்டின் வெளிநாட்டு ஊடக சங்கத்தின் (Hollywood Foreign Press Association) தலைவராக இருந்த ஃபிலிப் பர்க் இவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினார் பிரெண்டன்.


அதற்கடுத்த பலத்த அடியாக, இவருக்கு இவரது மனைவிக்கு விவாகரத்து நடந்தது. இது மட்டுமன்றி, மம்மி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பல விபத்துகளுக்கு உள்ளானார், பிரெண்டன். இதனால் இவரது உடலின் பல பகுதிகளில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.


இப்படி பல இன்னல்கலைக் கடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தி வேல் (The Whale) என்ற சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படம் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த லண்டன் திரைப்பட விழாவில் இவர் நடித்த வேல்ஸ் படமும் திரையிடப்பட்டது. இதைப் பார்த்தவர்கள், பிரெண்டனிற்காக 6 நிமிடங்கள் நின்றவாறு கைத்தட்டினர், இந்த வீடியோ பரவலாக வைரலானது. 






வாழ்கையில் பல துன்பங்களை சந்தித்த பின்னர் மெல்ல மெல்ல திரையுலகிற்கு வந்துள்ள ப்ரெண்டனை அன்பு கரங்களுடன் இவரது ரசிகர்கள் அரவனைத்துக் கொண்டனர். இவரது தி வேல் திரைப்படம் ரிலீஸானவுடன் கண்டிப்பாக வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.