உலக சினிமா கண்ட பல தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரும், வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்க கூடியவருமான பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் அவர் அடுத்ததாக இணைந்துள்ள படம் 'ஓபன் ஹெய்மர்'. படத்தின் போஸ்டர்கள் முன்னதாக சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 


 


   


ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 21ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை முதல் முறையாக விநியோகம் செய்கிறது. 


 




"அணுகுண்டின் தந்தை" என அழைக்கப்படும் ஓபன் ஹெய்மர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் ஓபன் ஹெய்மராக சில்லியன் மர்பி நடித்துள்ளார்.


American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆறாவது முறையாக சில்லியன் மர்பி - கிறிஸ்டோபர் நோலன் கூட்டணி மீண்டும் இணைகிறது. மேலும் இப்படத்தில் மாட் டாமன், எமிலி பிளண்ட், ராபர்ட் டவுனி ஜூனியர், ஃப்ளோரன்ஸ் பக் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். 


 






 


இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அந்த நாசகார அணுகுண்டு ஏராளமான உயிர்களை அழித்தது. இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் அவரின் குழுவுடன் சேர்ந்து முதல் அணுகுண்டை மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் மூலம் வெடிக்க செய்தனர். அந்த அணுகுண்டு சோதனையை மையாக வைத்து அதை அரசியல் கண்ணோட்டத்தில் படமாக்கியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன். 


 







அணுகுண்டு பற்றிய முதல் திரைப்படம் இது என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ளது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் டிரினிட்டி அணுகுண்டு சோதனையை இப்படத்தில் முயற்சி செய்துள்ளார்கள் என கூறப்படுகிறது. வெளியாகியுள்ள 'ஓபன் ஹெய்மர்' படத்தின் டிரைலரில் ஓபன் ஹெய்மராக நடித்துள்ள சில்லியன் மர்பி பேசும் டயலாக் ' அதை புரிந்து கொள்ளும் வரையில் பயப்பட மாட்டார்கள். அதை பயன்படுத்தும் வரையில் புரிந்து கொள்ள மாட்டார்கள்' எனும் வசனம் நோலன் ரசிகர்களுக்கு படம் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கிறது.