முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்த நடிகர்

Archive 81, How I met Your mother போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நிக் பாஸ்கல். இவர் Rebel Moon என்கிற படத்தில் நடித்தபோது அந்தப் படத்தில் பணியாற்றிய ஆல்லீ ஷெஹார்ன் என்கிற மேக் அப் ஆர்டிஸ்டை சந்தித்து இருவரும் காதல் வயப்பட்டுள்ளார்கள். இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில், நிக் பாஸ்கல் ஆல்லீ ஷெஹார்னை கலிஃபோன்ர்னியாவில் இருக்கும் அவரது வீட்டிற்குள் புகுந்து இருபது முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

தனது முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்துவிட்டு அங்கிருந்து மெக்ஸிகோவிற்கு நிக் தப்பிச் செல்ல முயற்சித்திருக்கிறார். அப்போது அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆல்லீயை அவரது வளர்ப்பு அன்னை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். கடுமையான காயங்களுடன் ஆல்லீ தற்போது மெதுவாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 நிக் பாஸ்கலுக்கு ஆயுள் தண்டனை

 நிக் பாஸ்கலை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் , இந்த நிகழ்வு நடப்பதற்கு சில நாட்கள் முன்பாக நிக் பாஸ்கல் தன்னை அணுக முடியாத வகையில் ஆல்லீ தடை உத்தரவு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்குள் மர்மமான முறையில் புகுந்து ஆல்லீயை கடுமையாக தாக்கி அவரை இருபது முறை கத்தியால் நிக் குத்தியதாகக் கூறப்படுகிறது. நிக் மீது கொலை முயற்சி  உட்பட இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருக்கு ஆயுள் தண்டனை கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மறுபக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் ஆல்லீக்கு ஹாலிவுட் ரசிகர்கள் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.