தல அஜித், மீனா, வசுந்தரா தாஸ், நக்மா உள்பட பலர் நடித்த ‘சிட்டிசன்’ மற்றும் ஷாம், சினேகா நடித்த ‘ஏபிசிடி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சரவண சுப்பையா. இவர் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் ’மீண்டும்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்துள்ளது. அந்த விழாவில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார். இப்போதெல்லாம் பெரும்பாலும் எல்லா ஆடியோ லாஞ்ச்களுக்கும் சென்றுவிடுவதால் பேச தொடங்கும் முன் எஸ்.ஏ.சி. ஊடக நண்பர்களை பார்த்து முகத்தை பார்த்து பார்த்து போர் அடித்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறி பேசத்தொடங்கினார்.



எஸ்.ஏ.சி. பேசுகையில்,"மீண்டும்… சரவண சுப்பையா… உங்களுக்கு ஏற்ற டைட்டில், சினிமாவுக்குள் ஒரு சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர் தான், அவர்களுள் சரவண சுப்பையாவும் ஒருவர். சிட்டிசன் திரைப்படத்திப் தன் திறமையை நிரூபித்தவரை அடுத்த ஒரு படம் சரியாக போக வில்லை என்பதால் காணாமல் போனார். சினிமா துறை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் ஃபீல்ட் அவுட் என்ற நிலை உள்ளது. இந்த திரைப்படத்தில் போலீஸ் டார்ச்சர், குழந்தை சென்டிமென்ட் என நிறைய விஷயங்கள் உள்ளது. லியோனி அண்ணனை நான்தான் சென்னைக்கு கூட்டி வந்தேன், சாலமன் பாப்பையா சினிமாவை எப்போதாவதுதான் துவைப்பார், ஆனால் லியோனி மேடை கிடைக்கும்போதெல்லாம் துவைப்பார், ஆனால் இனிமேல் துவைக்கமாட்டார் என்று நினைக்கிறேன், அவர் பையன் நடிக்க வந்துவிட்டார், அப்போது தான் அந்த வலி தெரியும்." என்று கூறினார். மேலும் விழாவிற்கு வருகை தந்த இயக்குனர் பேரரசு, நாஞ்சில் சம்பத் ஆகியோரை குறிப்பிட்டு பேசினார். கடைசியாக "நான் ஆறு மணிக்கு முன்னாள் வீட்டிற்கு செல்லவில்லை என்றால் எனக்கு சோறு கிடையாது, அதனால் தான் முன்னாடியே பேச வாய்ப்பு கேட்டேன், நான் போன பிறகு என்னை துவைக்கப் போகிறார்கள் மேடையில் உள்ளவர்கள்" என்று கூறி விடைபெற்றார்.



மீண்டும் என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதிரவன், ஷரவணன் சுப்பையா, அனைகா, சுப்பிரமணிய சிவா, யார் கண்ணன், துரை சுதாகர், உள்பட பலர் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசையில், வைரமுத்து பாடல் வரிகளில், ஸ்ரீனிவாசன் தெய்வாம்சம் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது ஷரவணன் சுப்பையாவின் ‘சிட்டிசன்’ போலவே விறுவிறுப்பான திரில்லர் கதையம்சம் கொண்டது என்பது தெரிய வைக்கிறது. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.