ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள பிடி சார்


வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக  ஐசரி கணேசன் தயாரித்து கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் தேவதர்ஷினி, முனிஷ்காந்த், தியாகராஜன், பிரபு, பாக்கியராஜ் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.


கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இப்படியான நிலையில் இப்படத்தின் முதல் பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் அவர் இசையமைக்கும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத் தக்கது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மே 16ஆம் தேதி வெளியாகி கவனமீர்த்துள்ளது.


பொதுவாகவே தனது படங்களில் 90ஸ் கிட்ஸ்களை கவரும் வகையில் நாஸ்டால்ஜியாவை தூண்டிவிடும் அம்சங்களை கதைக்களமாக தேர்வு செய்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா. அதே மாதிரி இந்த முறையும் சின்ன வயதில் நம் அனைவருக்கும் பிடித்தமான பிடி வாத்தியாராக இப்படத்தில் நடித்துள்ளார். காமெடி ரொமான்ஸ் என்று ஒருபக்கம் கதை செல்ல, தீவிரமான மெசேஜ் ஒன்றும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹிப்ஹாப் ஆதிக்கு தேவைப்படும் வெற்றியை இப்படம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஹிப்ஹாப் தமிழா படத்தைப் பற்றி பேசினார்.


அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு


இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் ஆதி “கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான் இசையமைத்த படம் அரண்மனை 4. இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் மூன்று பாடல்களுமே தற்போது ட்ரெண்டில் இருக்கிறது. சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ஹிப்ஹாப் தமிழா கம்பேக் என்று சொல்லி வருகிறார்கள். அதேபோல் விமர்சகர்களும் படத்திற்கும் பாடல்களுக்கும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளார்கள். ஓடிக்கொண்டு இருக்கும் குதிரைக்கு இந்தப் பாராட்டுகள் எல்லாம் பெரிதாக தெரியாது. ஆனால் கொஞ்சம் இடைவெளி விட்ட காரணத்தினால் இந்தப் பாடல்கள் எல்லாம் என்னை ரொம்ப ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கிடைக்கிறது. 


பிடி சார் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது நான் நடித்த படம், அதனால் இதன் மேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இன்னொரு விஷயம் ஒரு பார்வையாளனாக நான் இந்தப் படத்தைப் பார்த்து லேசாக கண் கலங்கிவிட்டேன். அந்த அளவுக்கு ஒரு அற்புதமான கதையை இயக்குநர் கார்த்திக் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் இந்தக் கதையை வேண்டாம் என்று சொல்வார் என நினைத்துதான் அவரிடம் கதை சொன்னோம். ஆனால் அவர் உடனே ஒகே சொல்லிவிட்டார். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் இப்படத்தை தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.