ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து, பாடி, நடித்து பிரபலமான ஹிப் ஹாப் ஆதி, தமிழ் திரைப்படங்களில் பாடகராக அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை பாடி அசத்தினார். அதைதொடர்ந்து, 2015ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார். தனி ஒருவன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம், தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். அதைதொடர்ந்து, தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு, கடந்த 2017ம் ஆண்டு மீசைய முறுக்கு எனும் படத்தை, எழுதி, இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றி பெற்றது.


புதிய போஸ்டர் வெளியீடு:


மீசைய முறுக்கு படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து, முழு நேர நாயகனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி, மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டார். நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களில் நடித்தார்.


தற்போது வீரன் மற்றும் பி.டி. வாத்தியார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பி.டி. சார் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், 3 பந்துகளையும், ஒரு கிரிக்கெட் பேட்டையும் கைகளில் வைத்துக் கொண்டு, விசில் அடித்தவாறு மைதானத்தில் ஹிப்ஹாப் ஆதி நின்றுள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






டாக்டார் ஹிப்ஹாப் ஆதி:


இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் படக்குழு, வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடிய தருணத்தில் வெளியிட்டனர். தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ், "ஹிப் ஹாப் தமிழா ஆதி விரைவில் நம் கல்லூரியில் டாக்டர் பட்டத்தைப் பெற உள்ளார். அரசு பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து தன்னுடைய ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருக்கிறார். அதனால் அவர் இனி டாக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதி என அழைக்கப்படுவார்” என கூறினார்.


நடிகர்கள் விவரம்:


”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தை இயக்கிய கார்த்திக் வேணு இயக்கும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து இருப்பதோடு, இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கதாநாயகியாக கஷ்மிரா பர்தேசி நடிக்க அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.