வாழ்க்கையில் கற்றுக் கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது என நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் ஆதி. ரசிகர்களுக்கு “ஹிப் ஹாப் தமிழா” ஆதி என்றால் மிகவும் பரீட்சையம். பல படங்களுக்கும் இசையமைத்த அவர், மீசையை முறுக்கு படம் மூலம் நடிகரானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த ஆதி சமீபத்தில் “பிடி சார்” என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 


இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதி, “ஹிப் ஹாப் தமிழாவாக நான் பொழுதுபோக்கு மற்றும் கல்வி என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என சொல்லிக் கொள்கிறேன். எல்லா இடங்களில் பேசும்போது படிப்பு ரொம்ப முக்கியம் என சொல்லிக் கொள்கிறேன். விளையாட்டும் ஒரு வகை கல்வி தான். அந்த வகையில் தொடர்ந்து நிறைய கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் கற்றுக் கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. படிப்பு நம்மை பண்பட செய்யும். ஒரு நடிகராக நான் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கத்துவேன். ஸ்கூலுக்கே போகமாட்டேன் என கேட்பதற்கு ஸ்டைலான விஷயங்களை படத்தில் காட்டுவோம். ஆனால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் கடைசி பெஞ்சில் ஜெயித்த 2 பேரை மட்டும் தான் காட்டுகிறார்கள். தோற்றவர்களை காட்ட மாட்டார்கள். அதில் எந்த சிறப்பும் இல்லை. நல்லா படிச்சு, ஒழுக்கத்தோடு, உங்களுக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் வாழும் வாழ்க்கை தான் என்றைக்கும் கெத்து. 


என்னை நம்புங்கள். என்னுடைய குடும்பத்தில் யாரும் சினிமா சார்ந்தவர்கள் இல்லை. அதனால் இந்த துறைக்கு வரும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனால் எனக்கு எள்ளளவும் பயனில்லை. நான் சினிமாவில் முயற்சிக்கும்போது ஒரு இன்ஜீனியர். வாய்ப்பு கிடைக்கும் போது எம்பிஏ படிச்சிட்டு இருந்தேன். அப்புறம் முனைவர் பட்டம் பெற்றேன். கல்வி எனக்கு மிகப்பெரிய மனவலிமையை கொடுத்தது. கல்வி என்றைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தாது. படிப்பு ரொம்ப முக்கியம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. இதை திருக்குறள் மட்டுமல்ல வாழ்க்கைக்கான பாடமாக பார்த்திருக்கிறேன். எந்தவொரு பின்புலமும் இல்லாத எனக்கு கல்வி தான் கைகொடுத்தது. என்றைக்கும் கற்று தலை நிமிர்ந்து சான்றோராக வாழ்ந்து சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குங்கள்” என தெரிவித்துள்ளார்.