ஜிப்ரான்


தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையை வழங்கி வருபவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். ரஹ்மான் தவிர்த்து சூஃபி இசையமையும் அரேபிய இசையையும் திரையில் கொண்டு வந்த காரணத்திற்காக ஜிப்ரான் பாராட்டிற்குரியவர். குறிப்பாக ஜிப்ரானின் மெலடி பாடல்கள் என்றால் அவற்றை ஒரு தேர்ந்த இசை ரசிகனால் துல்லியமாக சொல்லிவிட முடியும். வாகை சூட வா , வத்திக்குச்சி , திருமணம் எனும் நிக்காஹ் , உத்தம வில்லன் , அமர காவியன் , பாபநாசம் , அறம் , தீரன் , விஸ்வரூபம் உள்ளிட்டப் படங்களில் மிக சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிடித்தமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.


குரங்கு பெடல்


தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலகண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குரங்கு பெடல் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். மதுபானக்கடை , வட்டம் உள்ளிட்டப் படங்களின் வழியாக கவனமீர்த்த கமலகண்ணன் தற்போது குரங்கு பெடல் படத்தை இயக்கியுள்ளார். இபடத்தில் காளி வெங்கட் , பிரசன்னா பாலச்சந்திரன் , வேல்முருகன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள் . 


இஸ்லாத் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிப்ரான்


இப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய போது இப்படத்தில் தனது பெயரை ஜிப்ரான் என்று போடாமல் புதிய பெயர் ஒன்றை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்லாத்தில் இருந்து தான் மதம் மாறிய பின்னணியும் இந்த படமும் தனக்கு ஒரே நேரத்தில் நடந்ததால் இந்த படம் தன் மனதிற்கு நெருக்கமான படம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


“நான் சில காலம் இஸ்லாத் மதத்தை பின்பற்றி வந்தேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன். சட்டப்பூர்வமாக எல்லா மாற்றங்களையும் செய்துவிட்டேன்.  இதுவரை நான் இசையமைத்த படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை போட்டு வந்தேன். ஆனால் இந்தப் படத்தில் என்னுடைய அப்பாவின் பெயரோடு ஜிப்ரான் வைபோதா என்கிற பெயரை பயன்படுத்தியுள்ளேன். குரங்கு பெடல் படம் எனக்கு இதனால் மனதிற்கு நெருக்கமான படம் ” என்று ஜிப்ரான் கூறியுள்ளார். 


குஷியில் இந்துத்துவ ஆதரவாளர்கள்






தனது விருப்பத்தின் பேரில் மதம் மாறிய ஜிப்ரான்  இந்த தகவலை எதார்த்தமாக தெரிவித்திருந்தாலும் இந்த தகவல்  தெரிந்ததும் சமூக வலைதளங்களில் இருக்கும் இந்துத்துவ ஆதரவாளர்கள் ஜிப்ரான் மீண்டும் தனது தாய் மதத்திற்கு திரும்பியதில் வருக வருக என போஸ்டர் அடித்து வரவேற்று வருகிறார்கள் இந்துத்துவ ஆதரவாளர்கள்.