தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். அட்டகத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமு்கமான அவர் அடுத்தடுத்து இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துக்களையும், சாதி ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரான கருத்துக்களையும் பதிவு செய்திருப்பார். இதனால் பா.ரஞ்சித் படங்கள் என்றாலே எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
பா.ரஞ்சித்திற்கு எதிராக புகார்:
அவரது இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினர் இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் அவர் இந்து மதத்தினர் மனதை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான யுவராஜ் அளித்த பேட்டியில், “ திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் சமீப காலங்களில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் நான் படித்த பள்ளியின் எதிரில் ஒரு நந்தி இருந்தது. அதன் மீது ஏறினால் வானத்தை நோக்கி பறக்கலாம் என கூறுவர். அதன் மீது ஏறி நின்று வானத்தில் பறக்கிறேனா? இல்லையா? என்று முயற்சி செய்தேன் என்று கூறியுள்ளார்.
நீக்க வேண்டும்:
புத்தகம் என்பது சரஸ்வதி. அதன்மீது உட்கார்ந்தால் படிப்பு வராது என்று கூறுவார்கள். நான் வேண்டுமென்றே புத்தகத்தின் மீது ஏறி உட்கார்நது பார்ப்பேன். பாம்பு முட்டைகளை எடுத்து குடித்துள்ளேன் என்று பேசியுள்ளார். இந்துக்கள் நந்தி வடிவில் சிவபெருமானை வணங்குகின்றனர். படிப்புக்கு தாயாக விளங்கும் சரஸ்வதி தேவியை புண்படுத்தி உள்ளார். ஏனென்றால் ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் புத்தகங்களை வைத்து மக்கள் வணங்குகின்றனர்.
பா.ரஞ்சித்தின் இந்த கருத்துக்கள் பக்தர்கள் மற்றும் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்து மதத்தையும், இந்துக்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் ரஞ்சித் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பேசிய வீடியோவை யூடியூப்பில் இருந்தும் நீக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தங்கலான் படம் வெளியாக உள்ள நிலையில், இந்து அமைப்பினர் பா.ரஞ்சித்திற்கு எதிராக புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.