நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை, நயன்தாராவின் இணைய தொடரில் பயன்படுத்தியதற்காக, அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு வொண்டர்பார் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, இணைய தொடரை தயாரித்த நெட்ஃபிளிக்ஸ் நிறுனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ஏற்க மறுத்த நீதிமன்றம், நெட்ஃபிளிக்ஸின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியான நயன்தாராவின் இணைய தொடர்
நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்ட 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற இணைய தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இதன் ட்ரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் ஒரு காட்சி சில நொடிகள் இடம்பெற்றிருந்தது. அந்த காட்சி, உரிய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
நயன்தாராவிடம் இழப்பீடு கோரி வொண்டர்பார் வழக்கு
'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்'-ன் ட்ரெய்லரை பார்த்த தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த காட்சி அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதோடு நிற்காமல், 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, தனுஷின் சார்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், தனுஷின் பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நெட்ஃபிளிக்ஸ் சார்பாக மனு
இதனிடையே, நயன்தாரா மீது வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி, இணைய தொடரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே நடந்த இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, தொடர் வெளியான ஒருவாரம் கழித்தே வொண்டர்பார் வழக்கு தொடர்ந்ததாகவும், அதனால் ஆரம்ப கட்டத்திலேயே அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நெட்ஃபிளிக்ஸ் சார்பாக வாதிடப்பட்டது.
இதை எதிர்த்து வாதிட்ட வொண்டர்பார் நிறுவன வழக்கறிஞர், நானும் ரவுடி தான் படத்தின் அனைத்து காட்சிகள் மற்றும் நயன்தாராவின் உடை, சிகை அலங்காரம் என அனைத்துமே நிறுவனத்திற்குதான் சொந்தம், அதற்கான ஒப்பந்தத்திலும் நயன்தாரா கையெழுத்திட்டுள்ளதாக வாதாடினார். இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தனுஷ் நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இன்று(28.01.25) நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, நடிகர் தனுஷுக்கு எதிரான நெட்ஃபிளிக்ஸின் வழக்கை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், தனுஷின் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.