இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.
2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் பேசிய மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்களை சொல்வது போல ஜூலை 17 ஆம் தேதி அடுத்த வீடியோ வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளும் வீடியோ வெளியாகவுள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்தில் அருண்மொழிவர்மனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்