பிரபல யூட்யூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. 


யூட்யூபில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று அங்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டும் விமர்சனம் செய்து வீடியோவாக பதிவிட்டு வருபவர் இர்ஃபான். இவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார். 






இதனிடையே நேற்றைய தினம் இர்ஃபான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு  அதனை தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் மாயா பங்கேற்றிருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.


இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வதும், அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மறைமுகமாக இதனை செய்யும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவில் பலரும் திட்டி கமெண்டுகளை பதிவிட செய்தனர். “ஜெயில்க்கு போறது உறுதி”, “காசு இருந்தா மட்டுமே இது எல்லாம் சாத்தியம்”, “பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதற்கு இது உதாரணம்”, “இந்த சட்டம் ஒழுங்கு இதெல்லாம் ஏழைகளுக்கு மட்டும்தானா”, “நம் நாட்டில் கருவில் இருக்கும் சிசுவை பார்ப்பது தவறு என்றால், அதை வேறொரு நாட்டில் பார்த்துவிட்டு இங்கு வந்து வெளிப்படுத்துவதும் சம அளவு தவறுதான்” என தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறை காவல்துறையிடம் பரிந்துரை செய்துள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.