நடிகர் விஜய் நடித்துள்ள “The Greatest of All Time" படத்தின் அப்டேட், அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இதில் அவரது கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள The Greatest of All Time படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் ஏஜிஎஸ் நிறுவனம் 2வது முறையாக இணைந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதுமட்டுமல்லாமல் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் அமீர், சினேகா,லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ், ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் உள்ளனர். 2000த்தின் தொடக்க காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கியது. தொடர்ந்து அவ்வப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு ஏஜிஎஸ் நிறுவனம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி யுவன் இசையில் விஜய் பாடிய “விசில் போடு” பாடல் வெளியானது. ஆரம்பத்தில் பெரிய அளவில் கவராத அப்பாடல் கேட்க கேட்க அனைவராலும் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமை ஜீ தமிழ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகிறது. விஜய் மற்றும் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி பாடியுள்ள “சின்ன சின்ன கண்கள்” பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பவதாரிணியின் குரல் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்க்கு இன்று 50வது பிறந்தநாள் என்பதால் இன்றைய நாள் தி கோட் படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.