சினிமா மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக திகழும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


கலைக்குடும்ப வாரிசு 


உதயநிதி ஸ்டாலினுக்கு அறிமுகம் என்பது தேவையே இல்லை. மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பேரனாகவும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனாகவும் அறியப்பட்டார் உதயநிதி. ஆனால் தாத்தா, அப்பாவைப் போல நேரடியாக அரசியலுக்குள் நுழையாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு தயரிப்பாளராக முகம் காட்டினார் உதயநிதி ஸ்டாலின். 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த “குருவி” படத்தின் மூலம் "ரெட் ஜெயிண்ட் மூவிஸ்" நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரோடு திரையுலகில் கால் பதித்தார். 


அதனை தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், விநியோகமும் செய்ய தொடங்கினார். தொழில் சிறப்பாக நடைபெற்ற நிலையில் சூர்யா நடித்த ஆதவன் படத்தை தயாரித்த நிலையில், அதில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்து மக்களுக்கு முகம் காட்டினார். 


2012ல் ஹீரோவாக அறிமுகம் 


இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கிய “ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் மூலம் ஹீரோவானார் உதயநிதி ஸ்டாலின். சந்தானத்துடன் அவர் செய்த காமெடி,  படம் 100 நாட்கள் ஓடுவதற்கு காரணமாக அமைந்தது. உதயநிதியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கினார். தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், பொதுவாக என் மனசு தங்கம், நண்பேண்டா, இப்படை வெல்லும்,நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, சரவணன் இருக்க பயமேன், நெஞ்சுக்கு நீதி, கலகத்தலைவன், கண்ணை நம்பாதே, மாமன்னன் என பல படங்களில் நடித்தார். இதில் மாமன்னன் படம் உதயநிதியின் திரையுலகில் கடைசிப் படமாக அமைந்து விட்டது.


2022ல் அமைச்சர் உதயநிதி 


கலையை தொடர்ந்து அரசியலில்  தலைக்காட்ட தொடங்கிய உதயநிதி, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய தொடங்கினார். தனது நகைச்சுவை கலந்த அனல் பறக்கும் பேச்சால் மக்களை கவர தொடங்கினார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். பின்னர் 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 


அரசியலில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பினும் சினிமா துறையின் மீது உதயநிதிக்கும் இருக்கும் ஈர்ப்பு இன்றும் குறையவில்லை என்றே சொல்லலாம். அரசியலுக்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும் எப்போது வேண்டுமானாலும் தான் நடிக்க வருவேன் என சொல்லியுள்ளார். சினிமாவோ, அரசியலோ தன் இடத்தை இந்த குறுகிய வருடத்தில் நிரந்தரமாக பதிவு செய்ததில் உதயநிதி வென்று விட்டார் என்றே சொல்லலாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உதயநிதி..!




மேலும் படிக்க: Vanitha Vijayakumar: ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா?’ வனிதா விஜயகுமாரை தாக்கிய மர்ம நபர் யார்?