நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. 


அண்ணாத்த படத்தை தொடர்ந்து  சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்  திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு  பணியை மேற்கொள்ள, நீண்ட இடைவெளிக்குப் பின் சூர்யா படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி வருகிறது.


இதில் நடிகர் சூர்யா 13 விதவிதமான தோற்றங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு  கோவா, எண்ணூர் துறைமுகம், கேரளா, சென்னை  உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், புகழ்ச்சிகளுக்கும், இடியின் சத்தங்களுக்கும் நடுவே போர் வீரன் நுழைகிறான் என்ற கேப்ஷனோடு படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. 


கங்குவா என்பதற்கு நெருப்பு சக்தி கொண்டவர் மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என்று பொருள் என்பதால் இப்படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே இன்று சூர்யாவின் 48வது பிறந்தநாள் என்பதால் கங்குவா படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.