தமிழ் சினிமாவில் கதாநாயக பிம்பம் இல்லாமல் நடிப்புக்காக மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் வெகு சிலரே. அந்த வகையில் சமீபகாலமாக ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகராக உலா வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவருக்கு இன்று 56வது பிறந்த நாள் ஆகும்.


பிறந்தநாள் நாயகன் எஸ்.ஜே.சூர்யா:


1999ம் ஆண்டு வாலி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவரது மாறுபட்ட திரைக்கதையும், அவரது படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அஜித் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமான வாலியையும், விஜய் திரைப்படத்தின் முக்கியமான படமான குஷியையும் இயக்கி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் திரும்பி பார்க்க வைத்தார்.


இவர் இயக்கிய நியூ, அன்பே ஆரூயிரே, இசை படங்கள் வித்தியாசமான கதைக்களம் கொண்டது ஆகும், இயக்குனராக குறைந்த படங்களே இயக்கியிருந்தாலும் தற்போது நடிகராக கோலிவுட்டை மிரட்டி வருகிறார். நெத்தியடி, கிழக்குச் சீமையிலே படங்களில் அடையாளம் தெரியாத நடிகராக வந்து போன எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கிய நியூ படம் மூலமாக தமிழ்நாடு கொண்டாடும் நடிகராக உருவெடுத்தார்.


நடிப்பு அரக்கன்:


அதன்பின்பு மற்ற கமர்ஷியல் நாயகர்களைப் போல கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி என அவர் நடித்தாலும் அவரால் கதாநாயகராக அசத்த இயலவில்லை. நண்பன் படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்கும் வகையில் இருந்தது.


அப்போதுதான், அவருக்குள் இருந்த நடிகனுக்கு தீனி போடும் விதமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படம் அமைந்தது. ரகுவரனுக்கு பிறகு ஒரு வித வித்தியாசமான சைக்கோத்தனமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிகவும் மிரட்டலாக செய்து, தான் எவ்வளவு பெரிய வில்லன் நடிகர் என்பதை ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா காட்டியிருப்பார். அந்த படத்தில் அவர் அடுத்தவர் அழுகையை ரசிக்கும் காட்சியில் அவரது நடிப்பு அவருக்குள் இருந்த நடிப்பு அரக்கனுக்கு தீனியாக அமைந்தது.


வில்லத்தனத்தில் மெர்சல்:


அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அவரது நடிப்பு அரக்கனுக்கு மாறி, மாறி தீனி போட்டது. தான் இயக்கிய விஜய்க்கே வில்லனாக மெர்சலில் மெர்சல் காட்டியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. மான்ஸ்டர் படத்தில் ஒரு சாதாரண திருமண வயதை கடந்த இளைஞராக அசத்தியிருப்பார்.


மாநாடு படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாகவும், டான் படத்தில் வித்தியாசமான கல்லூரி பேராசிரியராகவும் மிரட்டி தான் பன்முக கலைஞன் என்பதை தமிழ் சினிமாவிற்கு காட்டிக் கொண்டே இருந்தார். நடிப்பு அரக்கனாக உருவெடுத்த எஸ்.ஜே.சூர்யாவின் நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தை திரையிட்டு காட்டியது மார்க் ஆண்டனி.


பன்முக கலைஞன்:


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பயந்த சுபாவம் கொண்ட அதேசமயம் நேர்த்தியான நபராக அசத்தலாக நடித்து படம் முழுக்க நம்மை கட்டிப்போட்டிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. இந்தியன் 2 படத்தில் குறைந்த காட்சிகளே வந்திருந்தாலும் இந்தியன் 3 படத்தில் பிரதான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா அசத்துவார் என்று கருதப்படுகிறது.


தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் மிக வித்தியாசமான ரவுடியாக அசத்தலாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. படத்தின் ட்ரெயிலரிலே 30 வயது இளைஞனைப் போன்ற தோற்றமும், அவரது சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் தனக்கென தனி மகுடத்தை சூட்டிக்கொண்ட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜஸ்டின் செல்வராஜ் பாண்டியன் என்ற எஸ்.ஜே.சூர்யா இன்னும் பல நடிப்புத் திறமையை காட்ட ஏபிபி வாழ்த்துகள்.