இந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


நேஷனல் கிரஷ் ராஷ்மிகா 


கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. வசீகரமான முக அழகு கொண்ட அவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகுக்கு ராஷ்மிகா சென்றார். அங்கு அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் ராஷ்மிகாவை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. 






2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் இந்திய அளவில் ராஷ்மிகாவை கொண்டு சேர்ந்தது. இந்த படத்தால் அவரின் மார்க்கெட் நிலவரம் எதிர்பாராத அளவுக்கு எகிறியது. சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, புஷ்பா படங்கள் ராஷ்மிகாவை புகழின் உச்சிக்கே கூட்டிச் சென்றது. 


தமிழில் அறிமுகம் 


2021 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ராஷ்மிகா. இதனைத் தொடர்ந்து 2வது படத்திலேயே நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும் ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு, சீதா ராமம், குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். தொடர்ந்து புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள் ப்ரண்ட், சாவா என அனைத்து மொழிகளிலும் அவர் படம் நடித்து வருகிறார். 


ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு 


28 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்த ஊரான கர்நாடகாவில் சொந்தமாக ஒரு வீடு இருப்பதாகவும், அவர் ஒரு படத்துக்கு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. 


ராஷ்மிகாவை சுற்றிய சர்ச்சை 


ராஷ்மிகா அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதல், நிச்சயதார்த்தம் வரை சென்றார். ஆனால் கீதா கோவிந்தம் படத்தின் வெற்றி புகழின் உச்சிக்கு அவரை அழைத்துச் சென்றதால் திருமண முடிவில் இருந்து பின்வாங்கினார். அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன் ராஷ்மிகாவின் கவர்ச்சியான போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இந்த வீடியோவை பரப்பியவரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.