சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான ஆல் டைம் பேவரைட் சூப்பர் ஹிட் நகைச்சுவை படங்களில் ஒன்று 'வேலைக்காரன்'. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமலா, செந்தில், சரத்பாபு, பல்லவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழ் ரீமேக்:
அமிதாப் பச்சன், ஸ்மிதா பாட்டில், ஷஷி கபூர், பர்வீன் பாபி நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'நமக் ஹலால்' என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
இளையராஜாவின் இசை:
இசைஞானி இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற தோட்டத்துல பாத்தி கட்டி, வா வா வா கண்ணா வா, மாமனுக்கு மயிலாப்பூர், வேலை இல்லாதவன் என படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. இப்படத்தில் இடம்பெற்ற 'வா வா வா கண்ணா வா...' பாடலை பின்னணி பாடகர் மனோ பாடியிருந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு மனோ பாடிய முதல் பாடல் இதுவாகும். இந்நிலையில், 'வேலைக்காரன்' படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் பிரபல திரைப்பட விநியோகஸ்தர், முன்னாள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் முன்னதாக பகிர்ந்த சுவாரஸ்யத் தகவலைப் பார்க்கலாம்.
சம்பளம் வாங்காத ரஜினிகாந்த்:
நடிகர் ரஜிகாந்த்துடன் நல்ல நட்பைக் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், தங்கள் நட்பு குறித்து பேசுகையில், “சம்பளம் பெறாமல் நடித்து கொடுத்த முதல் தமிழ் ஹீரோ ரஜினிகாந்த் தான்” எனத் தெரிவித்துள்ளார். கவிதாலயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஸ்ரீ ராகவேந்திரர்' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சம்பளம் இன்றி 'வேலைக்காரன்' படத்தில் நடித்துள்ளார். 'ஸ்ரீ ராகவேந்திரர்' திரைப்படம் ரஜினிகாந்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.