நடிகர் நாகசைதன்யாவை வைத்து இயக்குநர் வெங்கட்பிரபு  இயக்கி வரும் அடுத்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


இயக்குநர் கங்கை அமரனின் மகனும், சென்னை 28, சரோஜா, கோவா, மங்கத்தா, பிரியாணி, மாஸ், மாநாடு உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான வெங்கட்பிரபு தனது அடுத்தப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவோடு கைக்கோர்த்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 






மாமனிதன் படத்திற்கு பிறகு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இந்தப்படத்திற்கு இசையமைக்கின்றனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதம் நடந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கதையின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிக்காக, பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு அதில் நடிகர்கள் அரவிந்த் சாமி, நாக சைதன்யா ஆகியோர் சம்பந்தமான ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது.






மேலும்  நாகசைதன்யாவின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி வருவதாக சொல்லப்படும் இந்த படம் அவருக்கு முதல் நேரடி தமிழ் படமாக அமைந்துள்ளது. அதேபோல  வெங்கட்பிரபுவுக்கு இது நேரடி தெலுங்கு படமாகும். இதனிடையே நாக சைதன்யாவின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 23) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர். 


அவர்களின் எதிர்பார்ப்புகளை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் வெங்கட் பிரபு - நாகசைதன்யா இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு கஸ்டடின பெயரிடப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் துப்பாக்கிகளுக்கு நடுவே காக்கி உடையில் குற்றவாளியாக நாகசைதன்யா நிற்கும் புகைப்படம் படம் குறித்த ஆவலை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.