தமிழ் திரையுலகில் கதாநாயகன் என்ற பிம்பத்தை உடைத்து எறிந்த பட்டிதொட்டியங்கும் சென்று சேர்ந்த நடிகர்களில் தவிர்க்க முடியாதவர் முரளி. இவர் காலமானாலும் இவர் நடித்த படங்கள், இவரது காலத்தால் அழியாத பாடல்கள் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவருக்கு இன்று 60 வயது ஆகிறது.


முரளி படத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:


ப்ரேம பர்வா என்ற கன்னட படம் மூலமாக முதன்முதலில் நாயகனாக அறிமுகமான நடிகர் முரளி தமிழில் முதன்முதலில் அவர் நடித்த கன்னட படத்தின் ரீமேக்காக பூவிலங்கு படத்தில் நடித்தார். இளையராஜா இசையில் வெளியான அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க, அடுத்தடுத்து நல்ல கதை தேர்வுகள் மூலமாக அடுத்தடுத்து ஹிட் படங்களை அடுத்து மக்கள் மனதில் தவிர்க்க முடியாத நாயகனாக அவதாரம் எடுத்தார். புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் தமிழில் முதன்முதலில் இயக்கிய பகல்நிலவு படத்தின் நாயகன் முரளி.


தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பலவற்றிற்கும், திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரும் அவர்களது கட்சியுமே அதற்கு உதாரணம். ஆனால், பா.ம.க.விற்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு ஏதும் இருந்தது கிடையாது. ஆனால், அந்த பா.ம.க.வின் நிறுவனரான ராமதாஸ் முரளி நடித்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.


தொண்டன்:


1995ம் ஆண்டு நடந்த தொண்டன் என்ற படத்தில் முரளி நாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் புரட்சிகரமா ஆட்டோ ஓட்டுநராக நடித்திருப்பார். இந்த படத்தில் கட்டாய கல்விக்காக போராடும் ஒரு மருத்துவராக ராமதாஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் கட்டாய கல்வி கோரி வழக்கு தொடர்பவராக வந்து, கட்டாய கல்வி குறித்து மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது போல காட்சி இந்த படத்தில் இடம்பிடித்திருக்கும்.


நடிகர் முரளி நடிப்பில் ராமதாஸ் கவுரவ தோற்றத்தில் நடித்த இந்த படத்தை கார்வண்ணன் இயக்கியுள்ளார். ராஜன் சர்மா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.கே.பிலிம் மேக்கர்ஸ் சர்க்யூட் தயாரித்துள்ளது. ரோகிணி நாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இன்று பிறந்த நாள் காணும் மறைந்த நடிகர் முரளி இதே தொண்டன் படத்தில் இடம்பெற்றுள்ள நட்டநடு சென்டரு என்ற பாடலையும் பாடியுள்ளார். இவர் கடைசியாக தனது மகன் அதர்வா நாயகனாக அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் நடித்திருந்தார். கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தூக்கத்திலே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.