நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி ஷாலினி பிறந்தநாள் பரிசு வழங்கி அசத்தியுள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அன்னதானம் ரத்த தானம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


அது மட்டுமல்லாமல் அஜித் பிறந்தநாளை சிறப்பாக மாற்றும் பொருட்டு அவர் நடித்த பழைய படங்களான தீனா, மங்காத்தா, பில்லா, ஆகியவை ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 






இந்த நிலையில் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கி அசத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிறந்த நாள் கேக்குடன் அருகில் டுகாட்டி பைக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் பைக் பந்தய வீரரான அஜித்துக்கு விதவிதமான கார்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதில் அலாதி பிரியம் உண்டு. அந்த வகையில் பார்க்கும்போது அஜித்துக்கு மிகச் சிறந்த பரிசை ஷாலினி வழங்கி உள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அடுத்தடுத்து வெளியாகவுள்ள அஜித் படங்கள் 


நடிகர் அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் திரிஷா, அர்ஜூன், ஆரவ் என பலரும் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதேபோல் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், மீனா போன்றோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.