நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும்  பத்து தல படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்த நிலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. 






இதனிடையே சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடலாக  “நம்ம சத்தம்” என தொடங்கும் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், பத்து தல படத்தின் “நம்ம சத்தம்” என தொடங்கும் பாடல் பிப்ரவரி 3 ஆம் தேதி நடுஇரவு 12.06 மணிக்கு வெளியாகும் என தெரிவித்திருந்தார். 


முன்னதாக நேற்றைய தினம் அந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இதனால் பாடல் பற்றி அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு “நம்ம சத்தம்” பாடல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சிம்புவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள ரசிகர்கள், பாடல் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.