தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் நடிக்கவுள்ள `லயன்’ படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தனர். பூனேவில் ஷாரூக் கான் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பும் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. எனினும், நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால், ஷாரூக் கான் படப்பிடிப்புகளில் பிரச்னைகள் ஓயும் வரை கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், ஷாரூக் கானின் டூப் நடிகரை வைத்து நயன்தாராவுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 


தற்போது, `லயன்’ படம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே நயன்தாரா `லயன்’ படத்தைவிட்டு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்தையும், நவம்பர் மாதத்தின் முதல் பாதியையும் அட்லீயின் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த நயன்தாரா தற்போது எதிர்பாராத விதமாக ஆர்யன் கான் வழக்கு காரணமாக படப்பிடிப்புகளை நடத்த முடியாததால், படத்தில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அடுத்தடுத்த புதிய படங்களுக்காக தேதி கொடுத்திருப்பதால், அட்லீ - ஷாரூக் கான் கூட்டணியில் உருவாகும் `லயன்’ படத்தில் நயன்தாரா நடிக்க முடியாத சூழல் உருவாகியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 



இதனைத் தொடர்ந்து, நடிகை நயன்தாரா நடிக்கத் தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிப்பதற்காக தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீயுடன் தொழில்முறையாக நல்ல நட்பு கொண்டுள்ள நடிகை சமந்தா ஷாரூக் கானுடன் நடிப்பதாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் தனிப்பட்ட பிரச்னைகள் முற்றியிருந்த நேரத்தில் இந்த வாய்ப்பை நடிகை சமந்தா நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. 


எனினும், சில தகவல்களின் படி, நயன்தாரா `லயன்’ படத்தில் இன்னும் இருக்கிறார் என்றும் ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகை நயன்தாரா படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் பொய்யானவை எனவும், `லயன்’ படத்தின் திரைக்கதை, தயாரிப்பு முதலான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்த இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. 



`லயன்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து, நடிகை நயன்தாரா தரப்பில் இருந்தோ, `லயன்’ படக் குழுவினரின் தரப்பில் இருந்தோ அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை. எனவே நடிகை நயன்தாரா இடத்தில் எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகளும் ஒரு பக்கம் எழுந்துள்ளன. சில தகவல்களின்படி, நடிகர் ஷாரூக் கான் `லயன்’ படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டு வருகிறது.