ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி, பிரஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. லாரா தத்தா கடைசியாக 2001 -ம் ஆண்டு Miss Universe பட்டம் வென்றார். அதன்பிறகு, கடந்த 20 வருடங்களாக எந்த இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றிருக்கிறார். இவருக்கு வயது 21. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இஸ்ரேலில் நடைபெற்ற 80 அழகிகளுள் ஒருவராக கலந்து கொண்ட இந்திய பெண்மணியான இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டம் பெற்றிருந்தார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.
இந்தநிலையில், எய்லாட் நகரில் இருந்தபடி, ஹர்னாஸ் சாந்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, "என் மீது நம்பிக்கை வைத்து என் மீது பலர் அன்புமழை பொழிந்தனர். அவர்களுக்காக எனது இதயம் முழுவதும் மரியாதை நிரம்பி உள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றியை தொடர்ந்து, என்னை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க பலர் விரும்புகிறார்கள். நானும் பெரிய திரையில் எனது திறமையை காட்ட விரும்புகிறேன். இந்தி படங்களில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். இந்த நூற்றாண்டு மக்கள், திரைப்படங்களாலும், இணைய தொடர்களாலும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால், நானும் மக்களை ஈர்ப்பதுடன், சமுதாயத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி பேச விரும்புகிறேன்." என்று ஹர்னாஸ் சாந்து கூறினார்.
போட்டியின்போது சக போட்டியாளர்கள் ஹர்னாஸிடம், "நீங்கள் இன்றைய தலைமுறையை சேர்ந்த இளம் பெண்களுக்கு அவர்கள் சந்திக்க கூடிய மன அழுத்தங்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு ஹர்னாஸ் "இன்றைய இளம் தலைமுறையினர் முதலில் தன்னைதானே நம்ப வேண்டும். எப்போது அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று நம்புகிறார்களோ அப்பொழுதே அவர்கள் அழகாக மாறிடுவார்கள். உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை, உங்களுக்காக நீங்கள்தான் வெளியே வந்து பேச வேண்டும். ஏனெனில் நீங்கள்தான் உங்களுக்குத் தலைவி. நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். அதனால்தான் நான் இன்று இந்த இடத்தை அடைந்துள்ளேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.