நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் அதில் கிடைத்த சர்ச்சையின் வாயிலாக பிக்பாஸ் சீசன் 1 லும் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் கவனம் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த ‘ப்யார் ப்ரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’  ‘தாராள பிரபு’ உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.






இதனையடுத்து ப்ரியா பவானி சங்கருடன் அவர் நடித்த  ‘ஓ மன பெண்ணே’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தின் போது நெருங்கிய பழகியதாக தகவல்கள் வெளியாகியது. தொடர்ந்து சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்  ‘டீசல்’ மற்றும் ஸ்டார் ஆகிய படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தனது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டார். அன்று காலையில்  தனது வாழ்க்கை துணையோடு கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு  “புதிய மங்களகரமான தொடக்கம்” என்று ஹரிஷ் கல்யாண் பதிவிட்டிருந்தார். 


பின்னர் சிறிது நேரத்தில்  நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்யப்போவதாக கூறி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தாலும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஹரிஷ் கல்யாணும், அவருடைய தந்தையும் கலந்து கொண்டனர். 






அதில் பலரும் இதை காதல் திருமணம் என நினைத்த நிலையில் இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும்,  இந்த திருமண விழாவிற்கு ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பு வைத்து அனைவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.