பொறியாளன், வில் அம்பு, பியார் ப்ரேமா காதல் உள்ளிட்ட சில கவனிக்கத் தக்க படங்களில் நடித்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இளசுகளின் ஹார்ட் த்ரோப். கடைசியாக 2021ல் அவர் நடித்த ஓ மணப்பெண்ணே திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. தற்போது இவர் நடித்த நூறு கோடி வானவில் திரைப்படம் வெளியீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில் இருந்து...







“நான் சிறுவயதில் கீ போர்டு வாசிக்கக் கத்துக்கிட்டேன். இளையராஜா சாருடன் ட்ரூப்பில் இருந்த சதா மாஸ்டரிடம் தான் நான் கொஞ்ச காலம் கத்துக்கிட்டேன். அவர்தான் எனக்கு கீ போர்டு புரோடக்‌ஷன் எல்லாம் கத்துக் கொடுத்தார். நான் போட்ட ட்யூன்களை எடுத்துக் கொண்டு போய் யுவன் சங்கர் ராஜாவிடம் எல்லாம் காண்பிப்பார். அது யுவனுக்கே ஞாபகம் இல்லை. நான் அண்மையில்தான் அவரிடம் அதுபற்றி சொன்னேன்.முறைப்படி சங்கீதம் கத்துக்க அட்வைஸ் செஞ்சார். எங்க வீட்டுப் பக்கத்துலையே இருக்கற ஒரு பாட்டு டீச்சரிடம் ஹிந்துஸ்தானி சங்கீதம் ஒரு பத்து ராகம் கத்துக்கிட்டேன். மற்றபடி எனக்கு பாடவெல்லாம் வராது. ஆனால் நடுவில் சில காலம் இசையமைக்கலாமா அல்லது நடிக்கலாமா என்கிற ஒரு தள்ளாட்டம் இருந்தது. நான் நடித்த படங்களில் என்னுடைய கேரக்டரைப் பிரதிபலிக்கிற மாதிரி எந்தப் படமுமே இதுவரை அமைந்தது இல்லை. தாராளப் பிரபு படத்தில் வர கேரக்டர் அவங்க பாட்டிக்கு ரொம்ப ஃப்ரெண்ட்லியான கேரக்டர அம்மாவுடன் மிகவும் நெருக்கம். அது ஓரளவுக்கு என்னைப் பிரதிபலிக்கும்னு சொல்லலாம்” என தன்னைப் பற்றி ஸ்வீட்டான சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் ஹரீஷ்.






இவர் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.