தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார் இன்று தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 


கனவு நாயகி, நடிகை ராணி, குணச்சித்திர நடிகை, சிறந்த சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட ராதிகா சரத்குமாரின் திரை வாழ்க்கையை பகிர்ந்த ரசிகர்கள், வாழ்த்து கூறி வருகின்றனர். 


ராதிகா சரத்குமார்:


1978-ஆம் ஆண்டு ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக ராதிகா சரத்குமார் அறிமுகமானார். 16 வயதே ஆன ராதிகா, தனக்கு மூத்த நடிகரான சுதாகருடன் இணைந்து பாஞ்சாலி கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். முதல் படத்திலேயே நடிப்பின் மூலம் பெரிதாக பேசப்பட்ட ராதிகா அடுத்தடுத்த படங்களில் கொடிக்கட்டி பறந்தார். 


ரஜினியின் ஊர்காவலன் படத்தில் ராதிகாவின் காமெடிகளுக்கு இன்றும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். பசும்பொன், வீரத்தாலாட்டு, சூர்யவம்சம், தர்மதுரை, பூந்தோட்ட காவல்காரன் படங்களில் தனது கேரக்டருக்கு அழுத்தம் கொடுத்து நடித்து தன்னை நிரூபித்து இருப்பார். உழவன் மகன், வீர பாண்டியன், சிப்பிக்குள் முத்து, கேளடி கண்மணி, நல்லவனுக்கு நல்லவன், தாவணி கனவுகள், போக்கிரி ராஜா, கிழக்கு சீமையிலே படங்களில் கேரக்டரை உணர்ந்து நடிப்பில் அசத்தி இருப்பார் ராதிகா. 


கிராமத்து கதாபாத்திரங்களில் அந்த கேரக்டராகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ராதிகா, வயதானாலும் திரைத்துறையில் இருந்து தன்னை பிரிக்க முடியாது என வலம் வந்து கொண்டிருக்கிறார். தெறி, சகுனி, யானை, வெந்து தணிந்தது காடு, லவ் டுடே, கொலை உள்ளிட்ட படங்களில் விஜய், அருண் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோருக்கு அம்மாவாகவும், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து உள்ளார். 


ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த், மோகன், சுதாகர், பாக்கியராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக நடித்த ராதிகா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டும் இல்லாமல் 1985ம் ஆண்டு வெளிவந்த மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். வெள்ளித்திரை மட்டும் இல்லாமல் சின்னத்துறையிலும் சிம்மசொப்பனமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர். 


தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி, ராணி, சித்தி2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தனக்கு நிகர் தானே என நிரூபித்து வருகிறார். இதில், ராதிகாவுக்கு சொந்தமான ராடான் மீடியாவொர்க்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் சீரியல்களை தயாரித்து, அதில் நடித்தும் வருகிறார். கடந்த 11ம் தேதி திரைக்கு வந்து 45 ஆண்டுகள் கடந்ததை  கணவர் சரத்குமாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் ராதிகா.






கடந்த பிப்ரவரி மாதம் பிறந்த நாளை கொண்டாடிய சரத்குமார், ராதிகாவுடனான அழகிய தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் தொகுப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, திருமணம், நடிப்பு, அரசியல் என அனைத்திலும் தனக்கு பலமாக இருக்கும் ராதிகாவை புகழ்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 2001ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட ராதிகா, அவரின் சமத்துவ மக்கள் கட்சியிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.






இப்படி பன்முகங்களில் அசத்தி வரும் ராதிகா சரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.