விருதுநகரில் விஜயகாந்த் பிறந்த போது பார்த்தவர்கள் நினைத்திருக்கலாம், ’கண்ணு, காது மூக்கோட கறுப்பா ஒரு பிண்டம்’ என. விருதுநகரில் பிறந்திருந்தாலும் மதுரை மாநகர் விஜயகாந்த்தை வளர்த்தது. குடும்பத்துடன் மதுரையில் இருந்தாலும் 10ஆம் வகுப்பு வரை மட்டும் படித்தவர், அதன் பின்னர் தனது தந்தை கவனித்து வந்த அரிசி மண்டியை கவனித்து வந்தவருக்கு சினிமா மீது ஆர்வம் தொற்றிக்கொள்ள, மதுரையில் இருந்து கறுப்பு நிற உருவம் சுருட்டை முடியுடன் சென்னைக்கு ஒரு கனவுடன் கிளம்பினார். 


சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த விஜயகாந்த் நடித்த முதல் திரைப்படம் இனிக்கும் இளமை. இந்த படத்தில் தான் இவருக்கு விஜயகாந்த் என பெயர் வைக்கப்பட்டது. அதுவரை அவர் விஜயராஜ் என்ற இயற்பெயருடன் இருந்தார். இந்த படம் 1979இல் வெளியானாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பின்னர் 1980இல் வெளியான தூரத்து இடி முழக்கம் திரைப்படம் விஜயகாந்த் என்ற ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை தமிழ் சினிமா உலகிற்கும் தெரியவந்தது. 





தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் முழு நேர அரசியலில் ஈடுபட சினிமாவை ஓரம் கட்டிய காலகட்டம் அது. எம்.ஜி.ஆர் ஒதுங்கிக்கொண்ட பின்னர் தமிழ் சினிமா அதிகமாக மூன்று நடிகர்களைச் சுற்றியே சுழன்று வந்த காலகட்டம். அது செவாலியர் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் மூன்றுபேரின் கால் சீட்டுக்காவும் இளையராஜாவின் கண் அசைவிற்காகவும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்துக்கொண்டு இருந்த காலகட்டம்.  இப்படியான காலகட்டத்தில் விஜயகாந்தை வைத்து இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை நூறு நாட்கள் கடந்து வெற்றி பெற, விஜயகாந்த் மனதில் பெறும் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் வெளியான 5 படங்கள் தோல்வி அடைய, மீண்டும் எஸ்.ஏ. சந்திர சேகருடன் இணைந்து சாட்சி திரைப்படம் விஜயகாந்திற்கு திருப்புமுனையைத் தர அதன் பின்னர் சந்திர சேகர் இயக்கத்தில் 17 படங்களில் நடித்துவிட்டார். 




சிவாஜி ஒரு கட்டத்திற்கு மேல் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் கவனம் செலுத்த, கமலும் ரஜினியும் ஹிந்தியை குறி வைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது தமிழ் சினிமாவில் இரவும் பகலும் சுழன்று நடித்த நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். நகரங்கள் துவங்கி கிராமங்கள் வரை ஆண்கள் பெண்கள், இளசுகள் என அனைவரும் விஜயகாந்தின் ரசிகராகிப் போக அன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் கொண்டுவந்த குடும்பக்கதை, கிராமத்துக்கதை, போலீஸ் கதாப்பாத்திரம் என விதவிதமான கதைக்களங்களில் விஜயகாந்த் நடித்துவந்தார். இதில் அவ்வப்போது அரசியல் கதையையும் தேர்ந்தெடுத்து நடித்துவந்தார். இதனால் 1984ஆம் ஆண்டு மட்டும் 18 படங்கள் நடித்தார். ரஜினி மற்றும் கமலுக்கு மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 




அதன் பின்னர் அரசியலில் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கோலோச்சிக்கொண்டு இருந்ததற்கு மத்தியில் 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை உருவாக்கியது மட்டும் இல்லாமல் 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இவரின் கூட்டணிக்காக காத்திருந்தது. திமுக தலைவர் கருணாநிதியோ பழம் கனிந்து பாலில் விழும் எனவும் வரிப்புலி வரிசையே வருக வருக என்றெல்லாம் தூது விட, ஜெயலலிதாவோ நேரடியாகச் சென்று விஜயகாந்துடனான கூட்டணியை உறுதி செய்தார். 2011 தேர்தல் முடிந்ததும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். திரையுலகமோ அரசியல் களமே வெறும் காற்றில் கம்பு சுற்றாமல் பெறும் சுனாமிகளுக்கு மத்தியில் உருவான சூறாவளிதான் விஜயகாந்த். இன்று அவர் தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடினாலும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் இன்னும் விஜயகாந்தின் கம்-பேக்கிற்காக காத்திருக்கின்றனர். புரட்சிக் கலைஞர் என அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்திற்கு ஏபிபி நாடு சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்..!