இந்திய சினிமா வியந்து பார்க்கும் பல மனிதர்களில் மிக முக்கியமானவர் தான் கோபால ரத்னம் சுப்ரமணியம் என்னும் மணிரத்னம். நானும் மதுரைக்காரன் தான் என்று பல நடிகர்கள் கூறக்கேள்விப்பட்டிருப்போம். அதுபோல மணிரத்தினினமும் மதுரையில் பிரபல சினிமா பட விநியோகஸ்தர் கோபால ரத்தினம் என்பவரின் மகனாக ஜூன் 2ம் தேதி 1956ம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பிலேயே சினிமாவுடன் இணைந்து வளர்ந்த மணிரத்னம் இயக்குநராக களமிறங்க முடிவு செய்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் பல்லவி அனுபல்லவி. கன்னட திரைப்படமான இந்த படத்தில் அணில் கபூர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மணிரத்னம் உணர்வு என்ற மலையாள படத்தை மோகன்லாலை வைத்து இயக்கினார்.




1985ம் ஆண்டு மறைந்த பிரபல நடிகர் முரளி, நடிகை ரேவதி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பகல் நிலவு என்ற படம் தான் தமிழில் மணிரத்னம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைக்கதை அமையப்பெற்றிருந்தும் அன்றைய தேதியில் பகல் நிலவு திரைப்படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து இதய கோவில் என்ற படத்தை இயக்கிய பிறகு 1986ம் ஆண்டு மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான மௌன ராகம் என்ற படத்தை வெளியிட பட்டிதொட்டி எங்கும் சூப்பர்ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் பலரின் பார்வை மணிரத்னத்தின் பக்கம் திரும்பியது. 






உலக நாயகன் கமலுடன் நாயகன், பிரபு மற்றும் கார்த்திக் நடிப்பில் அக்னி நட்சத்திரம், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தளபதி, கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சத்ரியன் என்று ரத்தினம் தந்த அனைத்து கதைகளும் சூப்பர்ஹிட்டாக முன்னணி இயக்குநராக மாறினார் மணிரத்னம். பலரும் சொல்லத்தயங்கிய கதைக்களங்களை உலக சினிமாவிற்கு வழங்கியதில் மிகப்பெரிய பங்கு மணிரத்தினத்திற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பம்பாய், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் ஆயுத எழுத்து போன்ற பல படங்கள் அதற்கு சாட்சியாக திகழ்கின்றது.


நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா! 




அரவிந்த் சாமி மற்றும் ஆர். மாதவன் போன்ற சில சிறந்த நடிகர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை அவருக்கு உண்டு. இயக்குநரான மணிரத்னம் பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார். இறுதியாக தமிழில் பல முன்னணி நடிகர்கள் நடித்த செக்கச்சிவந்த வானம் என்ற படத்தை எழுதி, இயக்கி தயாரித்த மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய காவியத்தை மிகப்பெரிய பொருட்ச்செலவில் பல முன்னணி நடிகர்களை வைத்து எழுதி இயக்கி தயாரித்து வருகின்றார்.




6 முறை தேசிய விருதுபெற்றுள்ள மணிரத்னம் தமிழ்நாடு அரசு வழங்கும் விருது, நந்தி விருது, Filmfare விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று திரையுலகி முன்னணி கலைஞர்களாக இருக்கும் நடிகர் கார்த்திக் மற்றும் சித்தார்த் போன்றவர்கள் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு Abp நாடு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.